உலகில் எடையை குறைப்பதற்கு 400 வகையான வெயிட் லாஸ் டயட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் டியூக்கன் டயட். இதனைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த டியூக்கன் டயட்டை பின்பற்றினால், எடை மெதுவாக குறைந்தாலும், ஆரோக்கியமான வழியில் குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டியூக்கன் டயட்டை பின்பற்றும் போது, தினமும் தவறாமல் ஒரு மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்தால், நல்ல பலன் விரைவில் தெரியும். டியூக்கன் டயட் என்பது அன்றாடம் ஒருசில குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்டு வர வேண்டும். இப்படி செய்து வந்தால், மாதத்திற்கு 2 கிலோ உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கலாம்.
அதுமட்டுமின்றி, தினமும் 5 லிட்டர் தண்ணீரை தவறாமல் குடித்து வர வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். அதிலும் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்துவிட்டு, பின் டியூக்கன் டயட்டை பின்பற்றுவது மிகவும் சிறந்தது.
இங்கு அந்த டியூக்கன் டயட்டில் இருக்கும் போது எடுத்து வர வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அதன் படி முயற்சித்து உடல் எடையை ஆரோக்கியமாக குறையுங்கள்.
கடல் உணவுகள்
டியூக்கன் டயட்டில் இருக்கும் போது கடல் உணவுகளை எடுத்து வரை வேண்டும். தினமும் உணவில் மீன், இறால் போன்றவற்றை சேர்த்து வர வேண்டும். இருப்பினும் ஒருமுறை சாப்பிடும் போது, அளவுக்கு அதிகமாக கடல் உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி எடுத்தால், உடல் எடையானது அதிகரித்துவிடும். எனவே தினமும் அளவாக எடுத்து வர வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைக்கும்.
முட்டை
கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், வாரத்திற்கு நான்கு முட்டைகளை தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். இல்லாவிட்டால், ஒரு நாளைக்கு ஒரு முட்டைகளை சாப்பிட வேண்டும். முக்கியமாக முட்டையின் வெள்ளைக்கருவை தவறாமல் உட்கொள்வது அவசியம்.
சிக்கன்
சிக்கன் சாப்பிட்டால், சிக்கனில் இருந்து புரோட்டீனை உடலானது உறிஞ்சிக் கொள்ளும். அதிலும் சிக்கனை வேக வைத்தோ அல்லது க்ரில் செய்தோ சாப்பிட வேண்டும். ஒருவேளை அதனை பொரித்து சாப்பிட்டால், அதில் கலோரிகளானது அதிகரித்து, உடல் எடையானது அதிகரித்துவிடும். எனவே வறுத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கடல் சிப்பி
டியூக்கன் டயட்டில் கடல் சிப்பியையும் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் கடல் சிப்பியில் வைட்டமின் அதிகம் இருப்பதால், அவை உடலின் எனர்ஜியை தக்க வைத்துக் கொள்ளும். மேலும் நண்டு, இறால் போன்றவற்றையும் எடுத்து வருவது இன்னும் சிறந்தது. ஏனெனில் இவற்றில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான எனர்ஜியும் கிடைக்கும்.
தோல் நீக்கப்பட்ட இறைச்சி
டியூக்கன் டயட்டின் படி வாரம் ஒரு முறை தோல் நீக்கப்பட்ட இறைச்சிகளை எடுத்து வருவது நல்லது. ஏனெனில் தோல் நீக்கப்பட்ட இறைச்சியில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், அவை உடலை ஆரோக்கியமாகவும், சீரான நோயெதிர்ப்பு சக்தியுடனும் வைத்துக் கொள்ள உதவும்.
உப்பு
உண்ணும் உணவில் ஒரு சிட்டிகை உப்பு மட்டும் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி உணவில் எப்போதும் உப்பு அதிகம் சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால், அவை கூட உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.
நார்ச்சத்துள்ள உணவுகள்
டியூக்கன் டயட்டின் படி நார்ச்சத்துள்ள உணவுகளையும் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும். அதிலும் ப்ரௌன் பிரட், ஓட்ஸ், கோதுமை போன்றவற்றில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்து மற்ற உணவுகளை எடுத்து வந்தால், அவை எடையை குறைக்க தடையாக இருக்கும்.