வீட்டில் வெறும் தக்காளி மற்றும் வெங்காயம் தான் உள்ளதா? அப்படியெனில் அதைக் கொண்டே அருமையான குழம்பை செய்யலாம். அத்துடன் முருங்கைக்காய் சேர்த்துக் கொண்டால், குழம்பின் சுவை இன்னும் சூப்பராக இருக்கும். இது ஒரு பேச்சுலர் ரெசிபி எனலாம்.
ஏனெனில் அந்த அளவில் இந்த தக்காளி முருங்கைக்காய் குழம்பின் செய்முறை மிகவும் சிம்பிளாக இருக்கும். சரி, இப்போது அந்த தக்காளி முருங்கைக்காய் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
[center][/center]
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் – 1 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 4 (மென்மையாக அரைத்தது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் முருங்கைக்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சுவை பார்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.
பிறகு வாணலியை மூடி வைத்து 10 நிமிடம் நன்கு குழம்பை கொதிக்க விட வேண்டும்.
பின் மூடியை திறந்து, காய்கறி வெந்துவிட்டதா என பார்க்கவும். காய் நன்கு வெந்துவிட்டால், அடுப்பில் இருந்து வாணலியை இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான மற்றும் சிம்பிளான தக்காளி முருங்கைக்காய் குழம்பு ரெடி!!!