உடலுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் நாப்கின்களிலிருந்து நம்மை விடுவிக்க, ‘Kenaf fibre’ எனப்படும், புளிச்ச கீரை தண்டில் நாப்கின்கள் தயாரித்து அசத்தியிருக்கின்றனர் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவர்களான நிவேதா, கௌதம். இவர்கள் இருவரும் ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள்.
ஒரு ஆய்விற்காக Kenaf செடி அதாவது புளிச்ச கீரையினை விவசாயம் செய்பவர்களை சந்தித்துள்ளனர். இந்த கீரையின் இலைகள் உணவிற்கு பயன்பட்டாலும், அதன் தண்டுகள் வீணாகிப் போவதாக விவசாயிகள் இவர்களிடம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள் என்பதால், எந்த நாரில் என்ன உடைகளை நெய்யலாம் என்று உடனடியாக அவர்கள் தங்களுக்குள் ஒரு கணக்கு போடுவார்கள். அது போலவே அந்த தண்டில் இருந்து நாரினை எடுத்து அதை துணியாக்கி ஆடை வடிவமைத்து வந்துள்ளனர்.
‘முதலில் புளிச்ச கீரை தண்டில் இருந்து ஆடைகள்தான் தயாரித்தோம். பிறகு தான் அந்த துணிகள் நல்ல உறிஞ்சும் சக்தியும், நுண்ணுயிரைக் கொல்லக்கூடிய திறன் இருப்பது தெரிய வந்தது. அப்போதுதான், இதை ஏன் சானிடரி நாப்கின்களாக பயன்படுத்தக்கூடாது என்று தோன்றியது.
பல ஆராய்ச்சிக்கு பின், இரண்டு ஆண்டுகள் கழித்து, 100% இயற்கை மூலிகைகளால் ஆன ப்ளிஸ் பேட்ஸ் (Bliss Pads) உருவானது. வெளியே மிருதுவாகவும் தோலை பாதிக்காத வண்ணம் இந்த நாப்கின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றார் நிவேதாநிவேதாவை தொடர்ந்து பேசிய கெளதம், ‘இந்த இயற்கை நாப்கின்கள் 4 மாதத்தில் முழுமையாக மட்கக்கூடியது. புளிச்ச கீரை செடிகள் வளர சிறிய அளவு தண்ணீரே போதும்.
மேலும் இந்த செடிகள் இயற்கையாகவே மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. இதை எங்கள் கல்லூரியிலேயே விளைவித்து வருகிறோம். அதன் பிறகு அதன் தண்டுகளில் இருந்து, நாங்களே உருவாக்கிய கருவியைக் கொண்டு நார்களை பிரித்து எடுத்து, துணியாக செய்தோம். ‘ப்ளிஸ் பேட்ஸ்’க்கு ஒரு முழுமையான உருவம் கிடைக்கும் வரை நிறைய ஆய்வுகள் மேற்கொண்டோம்.
அதில் பல முன்மாதிரிகளை உருவாக்கி, அதை எங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கும், நண்பர்களுக்கும் உபயோகிக்க கொடுத்தோம். அவர்களுடைய ஆலோசனைகளை கேட்டு மாற்றங்கள் செய்த பின்னரே ப்ளிஸ் பேட்ஸை முறையாக விற்பனைக்கு வெளியிட்டோம். இது, அரசாங்கத்தின் அனுமதி சான்றுடன், அங்கீகரிக்கப்பட்ட நாப்கின்கள்’ என்கிறார் கௌதம்.
மென்சுரல் கப், துணி நாப்கின்கள் இருக்கும் போது, நீங்கள் ப்ளிஸ் பேட்ஸ் பரிந்துரைப்பது ஏன் என்று கேட்டதற்கு, ‘துணி நாப்கின்களும் உடலுக்கு நல்லதுதான். இயற்கைக்கும் நல்லது. ஆனால் அனைவராலும், ஒவ்வொரு முறையும் துணி நாப்கின்களை முறையாக சுத்தம் செய்ய முடியாது. சரியாக சுத்தம் செய்யாவிட்டால், அதுவே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எந்த நாப்கினாக இருந்தாலும், 3-4 மணி நேரத்திற்குள் அதை மாற்ற வேண்டும்.
மென்சுரல் கப்களை கூட, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து பயன்படுத்துவதே சிறந்தது. இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. மேலும், மென்சுரல் கப்களை பொறுத்தவரையில், அது பெண் உறுப்புக்குள் செலுத்தி பயன்படுத்த வேண்டும்.
எப்போதுமே, வெளிப்புறம் பயன்படுத்தும் கருவிகளே உடலுக்கு சிறந்தது. மென்சுரல் கப்களை பள்ளி செல்லும் சிறுமிகள் பயன்படுத்துவது கடினம். அவர்கள் சரியாக உடலுக்குள் பொறுத்தவில்லை எனில், அதுவே சிக்கலாக முடியும். மேலும் அது சிலிக்கான், ரப்பரால் தயாரிக்கப்பட்டது. அதைவிட இயற்கை மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட நாப்கின்கள், உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது’ என்கின்றனர் இருவரும் கோரசாக.
சுய சக்தி விருது, I3 விருது, சத்ர விஸ்வகர்மா விருது என்று பல விருதுகள் இவர்களின் புது முயற்சிக்கு கிடைத்துள்ளது. இந்த நாப்கின்களை வாங்க விரும்புபவர்கள், www.blisspads.com என்ற இணையம் மூலமாக ஆர்டர் செய்யலாம். இந்தியா முழுதும் எங்கு இருந்தாலும், ஆர்டர் அளித்தவுடன் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக வழங்கப்படும். கோவைவாசிகள் என்றால் பக்கத்திலிருக்கும் ஆர்கானிக் கடைகளை அணுகி, அங்கு பெற்றுக் கொள்ளலாம்.