பதினைந்தே நாட்களின் சிவப்பழகை பெற இந்த க்ரீம்களைப் பயன்படுத்துங்கள் என்னும் விளம்பரம் பட்டிதொட்டியெல்லாம் இருக்கும் பெண்களின் மனதை அசைத்துப்பார்க்கவே செய்யும்.
சற்றே சிவப்பாக இருந்தாலும், மாநிறமாக இருந்தாலும் அந்த க்ரீம்களின் உதவியால் தங்கள் முகம் பளபளத்து மினுப்பதைக் கண்ணில் கண்டு மகிழ்ந்து எவ்வளவு விலைகொடுத்தேனும் அந்தக் க்ரீம்களை வாங்கிப்பூசுவார்கள். இதில் கறுப்பு நிற அழகிகளின் மனநிலையை பற்றி கேட்கவே வேண்டாம்…
அழகும் ஆரோக்கியமும் உடல்நலத்தைப் பொறுத்தே அமையும் என்னும் போது இத்தகைய விளம்பரங்களை எப்படி நம்புகிறார்கள் என்பதே கேள்விக்குரியதுதான்.
சிவப்பழகு க்ரீம்களாகட்டும், பாசிப்பருப்பு மாவுகளாகட்டும் எல்லாமே தற்காலிகமாக சருமத்தைப் பொலிவாக காட்டகூடியதுதான். இயற்கை பொருள்களால் சருமம் ஓரளவு பராமரிப்புடன் ஆரோக்கியமாக இருக்கும்.
இதில் கவனிக்கத்தக்க வேண்டியது சிவப்பழகு அளிக்கக்கூடிய க்ரீம்கள் என்று வரிசைகட்டி நிற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட க்ரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நிச்சயம் சருமம் பாதிக்கவே செய்யும்.
இதனால் ஒவ்வாமை, சரும எரிச்சல், சரும தடிப்பு போன்ற பிரச்னைகள் வந்தாலும் அதற்கு தனி சிகிச்சைகள் தேடும் பெண்கள் இத்தகைய க்ரீம்களை உபயோகிப்பதில் மட்டும் நிறுத்துவதே இல்லை.
செயற்கை க்ரீம்கள் தற்காலிக பொலிவைத் தருகிறது என்பதை விட அதிர்ச்சியானது விரைவிலேயே சருமத்தைச் சுருக்கங்களாக்கி வயதான தோற்றத்தை தந்துவிடுகிறது என்பது… ஆரம்பத்தில் பொலிவை அதிகரிக்கும் சருமப்பூச்சுகள் நாளடைவில் முகத்தில் கருப்புத் திட்டுக்களை உண்டாக்கிவிடுகிறது.
இதனால் தான் முகத்தில் பருக்கள், கூந்தல் உதிர்வு, வெடிப்பு, சருமப்பூச்சுகளை பேசாமல் விட்டால் வறண்டு போதல் போன்றவற்றுக்கெல்லாம் காரணம் செயற்கைப் பூச்சுகள் தான்..
முன்பெல்லாம் விசேஷக்காலங்களில் மட்டுமே அழகைக் கூட்டி காண்பிப்பதற்காக செயற்கைப்பூச்சுகளைப் பயன்படுத்தினார்கள்.
ஆனால் இன்று அன்றாடம் உணவு என்பது போல அனுதினமும் மேக்கப் இல்லாமல் வெளியே வர மறுக்கிறார்கள் பெரும்பாலான பெண்கள்.
70 வயதுக்கு மேல் வரவேண்டிய சுருக்கங்கள் செயற்கை களிம்புகளின் உதவியால் 40 வயதிலேயே எட்டிபார்க்கத் தொடங்கு கிறது…
அழகாய் இருக்கும் பெண்கள் அழகைக் கூட்டி காண்பிப்பதில் மெனக்கெடுவதில் தவறில்லை.
ஆனால் அதை அளவோடு செய்தால் நல்லது என்கிறார்கள் சருமநோய் சிறப்பு நிபுணர்கள்.. இயற்கையான அழகை பராமரித்தாலே ஆரோக்கியம் குன்றாமல் அழகாய் வாழலாம்.. அழகாய் வாழ்வோம்.. ஆரோக்கியம் காப்போம்..