தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும்.
பிள்ளைகளின் தேர்வு பயத்திற்கான காரணம்
தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். பதற்றம் ஏற்பட்ட உடன், அட்ரீனல், கார்டிசால் போன்ற ஹார்மோன்களால் பலவிதமான உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதயம் வேகமாக துடிப்பது, உடல் சூடாகி விடுவது, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை பெருகுவது, கண்மணிகள் விரிவதால் பார்வை சற்றே மங்கலாவது, பசி அறவே இல்லாமல் இருப்பது, நாக்கு வறண்டு விடுவது போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும். நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும் போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.
மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும். இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும், கேட்கும் பாடங்கள் சற்று குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும்.
குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள், அதிகமான அலைச்சுழலில் மனம் இருந்தால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது. பரீட்சை பயத்தை போக்குவது எப்படி?
திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்காகத் தான். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக் கொள்ள வேண்டும்.
மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும் போது ஆழ்ந்த மனதுடன், வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்குத் தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போது தான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும்.