தேவையானவை:
கோதுமை மாவு – 1 கப்
சோயாமாவு – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பூரணத்துக்கு:
உளுந்து – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 2
சோம்பு – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ulunthu chapathi recipe in tamil cooking tips
செய்முறை:
கோதுமை மாவையும், சோயா மாவையும் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும். ஒரு மிளகாயுடன் உளுந்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் சோம்பு, உப்பு, ஒரு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும், (ஒரு குச்சியை விட்டுப் பார்க்கும்போது மாவு ஒட்டாமல் வர வேண்டும்). பிறகு இந்த உளுந்து பூரணத்தை ஆற வைத்து உதிர்த்துக் கொள்ளவும். கடாய் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, உளுந்து பூரணத்தை சேர்த்துக் கிளறி இறக்கவும். பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி கிண்ணம் போல் செய்யவேண்டும். உளுந்து பூரணத்தை அதில் நிரப்பி, உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும். சப்பாத்திக்குள் வேக வைத்த உருளைக்கிழங்கை வைத்து செய்வதைத்தான் நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், இந்த சப்பாத்தியில் உளுந்து பூரணத்தை வைத்து செய்வதால், புரதச்சத்து அதிகமாகக் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான டிபன் இது.