எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், கொய்யாவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். கொய்யா பழம் பல்வேறு சத்துக்களை கொண்டது. இதில், வைட்டமின் சி அதிகம் உள்ளது. மலச்சிக்கலை போக்குகிறது. கொய்யா இலைகள் தோல்நோய்களை சரிசெய்கிறது. காய்ச்சலை தணிக்கும் தன்மை உடையது.
கொய்யா மரத்தின் காய், பழம், இலை என அனைத்து பாகங்களும் மருந்தாகிறது. கொய்யா இலைகளை பயன்படுத்தி காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொய்யா இலைகள், பனங்கற்கண்டு. கொய்யா இலைகள் 10 எடுக்கவும். இதை நன்றாக சுத்தப்படுத்தி துண்டுகளாக்கி போடவும். இதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி தினமும் 3 வேளை குடித்துவர சிக்குன் குனியா, டெங்கு என அச்சுறுத்தும் காய்ச்சல் சரியாகும். காய்ச்சல் காரணமாக ரத்த வட்ட அணுக்கள் குறைபாடு ஏற்படும். இதை குறையாத வண்ணம் பார்த்துக்கொள்ளும். இந்த தேனீரை குடித்துவர கிருமிகள் விலகிப்போகும். பல்வேறு நன்மைகளை கொண்ட கொய்யா இலைகள் பூஞ்சை காளான்கள், நோய் கிருமிகளை போக்கவல்லது. நோய்களை குணப்படுத்த கூடியது.
கொய்யா இலைகளை பயன்படுத்தி ஆறாத புண்களை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொய்யா இலைகள், தேங்காய் எண்ணெய். ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் கொய்யா இலைகளை சேர்த்து காய்ச்சவும். இந்த தைலத்தை ஆறவைத்து வடிகட்டி போட்டுவர ஆறாத புண்கள் ஆறும்.
மேல்பூச்சாக போடும்போது சேற்றுப்புண், விரல் இடுக்குகளில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்றவை குணமாகும். தலைக்கு தேய்த்து குளிப்பதன் மூலம் பொடுகு இல்லாமல் போகும். தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, படை போன்றவற்றுக்கு மேல்பூச்சாக பயன்படுத்தலாம். கொய்யா இலைகள் வீக்கத்தை வற்ற செய்யும். வலியை குறைக்கும்.
கொய்யா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.
இதேபோல், கொய்யா இலைகளை மென்று சாறை மட்டும் விழுங்கினால் பல் வலி குறையும். பல் சொத்தை சரியாகும். ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும். பற்கள் பலம் பெறும்.பச்சை நிறமுள்ள கொய்யா பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் தண்ணீரை வடிக்கட்டி குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுப்படும். மலச்சிக்கலுக்கு மருந்தாக விளங்குகிறது. கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது. கொய்யா அதிக சத்துக்களை உள்ளடக்கியது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. தோல் நோய்களை குணமாக்குகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு, வீக்கத்துக்கான மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு செவ்வாழை மருந்தாகிறது. செவ்வாழையை மென்று சாப்பிடுவதால் பற்கள் பலம் பெறும். ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு சரியாகும்.