உடல் எடை குறித்த பயம் எல்லாருக்கும் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருக்கிறது என்கிறவர்கள் முதலில் கவனிப்பது அவர்களது எடையைத் தான் உடல் எடை அதிகமாக இருந்தால் பல்வேறு நோய்கள் தானாக வந்து விடும் என்று தெரிந்து பல மெனக்கெடல்களை எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் சிலருக்கு எடை குறைவேனா என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கும். நீங்கள் என்ன தான் உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தாலும், உங்களுடைய சில பழக்க வழக்கங்களால் கூட எடை குறையாமல் இருக்கலாம் தெரியுமா? நீங்கள் காலையில் செய்திடும் சில பழக்கங்களால் என்னென்ன பிரச்சனை ஏற்படுகிறது என்று பாருங்கள்
அதீத தூக்கம் : சராசரியாக ஒரு மனிதன் ஏழு மணி நேரம் தூங்கினால் போதும் . ஆனால் அதைத் தாண்டி பத்து மணி நேரம் தூங்குகிறவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இப்படி அதிகமாக தூங்குவதால் பிஎம்ஐ அதிகமாகும்.
சூரிய ஒளி : தூக்கம் கலைத்த பிறகும் கண்களை மூடியே அதிக நேரம் படுத்திருக்க கூடாது. இது சோம்பேறித்தனத்தின் அடையாளம் என்றாலும் முக்கிய காரணமாக சொல்லப்படுவது. சூரிய ஒளி தாமதமாக படுவது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. விடியற்காலை வெயில் நம் உடலில் படுவதால் நம்முடைய உடல் மெட்டபாலிசம் சுறுசுறுப்படையும், ஜீரண சுரப்பிகள் இயங்கத் துவங்கும்.
பழக்க வழக்கம் : தேசிய தூக்க நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் தங்கள் ஒவ்வொரு நாளும் படுக்கையை தயார் படுத்தி, விரித்து படுப்பவர்களுக்கு சீக்கிரத்தில் ஆழ்ந்த தூக்கம் வருகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். நிம்மதியான தூக்கம் கூட நம்முடைய உடல் எடையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சார்லஸ் டுஹிக் என்பவர் எழுதிய பவர் ஆஃப் ஹேபிட்ஸ் ( The power of habbits)என்ற புத்தகத்தில் உங்களுடைய தினசரிகள் செய்வது எவ்வளவு முக்கியமானது. அது எப்படியெல்லாம் உங்கள் ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது என்பதை விவரித்திருக்கிறார்.
சரியான நேரம் : கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இரண்டு ஆண்டுகளாக அதிக எடையில் இருந்த ஆண் பெண் என சுமார் 162 பேரை ஆய்வு செய்திருக்கிறார்கள். அதில் உடல் எடை குறைப்பதற்காக அவர்கள் செய்யும் முயற்சிகள் காலை நேரத்தில் ஒரு பிரிவினரும் மாலை நேரத்தில் ஒரு பிரிவினரும் செய்திருக்கிறார்கள். அவர்களில் காலை நேரத்தில் செய்கிறவர்களுக்கு நிறைய பலன் கிடைத்திருக்கிறது.
காலை உணவு : ஒரு நாளுக்கு தேவையான எனர்ஜியை கொடுப்பது நீங்கள் சாப்பிடும் காலை உணவு தான். அதனை தவிர்ப்பது அல்லது கலோரி குறைவாக எடுப்பது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.