பருமனாக இருக்கிறவர்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டுமே என்ற கவலை, உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்க வேண்டுமே என்ற கவலை. ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்கள் அதை அதிகரிக்க பெரிதாக எந்த முயற்சியும் செய்வதில்லை. மாறாக தான் ஒல்லியாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகின்றனர்.
ஆனால் உடல் எடை அதிகமாக இருப்பது எப்படி ஆபத்தான ஒன்றோ அதே போல தான் உடல் எடை குறைவாக இருப்பதும். உயரத்திற்கு கேற்ப உடல் எடையை சிறு வயது முதலே பராமரிக்க வேண்டியது அவசியம். இந்த பகுதியில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்து பயன் பெறுங்கள்.
1. கஞ்சி:
கஞ்சி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா என கேட்க்காதீர்கள். சரியான எடையில் ஆரோக்கியமாக இருக்க கஞ்சி சிறந்த உணவாகும். உடைத்த அரிசி மற்றும் கால் பங்கு பாசிப்பயறு கஞ்சியை காலையில் பருகுவது குழந்தைகளின் உடல் எடையை கூட்ட உதவும்.
பெரியவர்களாக இருந்தால் அரிசியும் தேங்காயும் அருமையான உணவாக அமையும்.
2. எள் சாப்பிடுங்கள்:
எள் இளைத்த உடலுக்கு ஏற்ற உணவாகும். எள்ளை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தோசை, இட்லிக்கு எள் சட்னி, எள்ளு பொடி, அல்லது எள் உருண்டையை கூட நீங்கள் சாப்பிடலாம்.
3. உளுந்து:
உளுந்து உடல் எடையை கூட்ட உதவும். குழந்தைகள் மற்றும் பெண்கள் உளுந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. உளுந்து வடை ஒரு சுவையான உணவாகவும், உடல் எடையை கூட்டவும் உதவும்.
4. தேங்காய் பால்:
தேங்காய் பால் கூட ஒரு சுவையான உணவு தான். இதை நீங்கள் சிரமப்பட்டு சாப்பிட வேண்டும் என்றெல்லாம் இல்லை. வாரத்தில் இரண்டு முறை தேங்காய் பாலை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
5. வாழைப்பழம்:
உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் நேந்திரம் வாழைப்பழத்தை சாப்பிடலாம். அதை தேனுடன் கலந்து மாலை நேரத்தில் சாப்பிடலாம்.
6. பால், நெய்:
பசுவின் பால் மற்றும் நெய் ஆகிய இரண்டுமே உடல் எடையை அதிகரிக்க உதவும் பொருட்களாகும். இதனை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.