கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு. இந்த குதிகால் வெடிப்பு வருவதற்கு பலரும் வறட்சி மட்டும் தான் காரணம் என்று நினைக்கிறோம். ஆனால் வறட்சி மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும்.
அந்த காரணங்களை குதிகால் வெடிப்பால் கஷ்டப்படும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். குதிகால் வெடிப்பு ஒருவருக்கு இருந்து, அதனை சரியாக கவனிக்காமல் விட்டால், அதனால் கடுமையான குதிகால் வலியை சந்திப்பதோடு, சில நேரங்களில் முற்றிய நிலையில் இரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே குதிகால் வெடிப்பு இருந்தால், அதனை போக்க முயற்சிப்பதோடு, அது எதனால் வருகிறது என்பதையும் தெரிந்து கொண்டால், பிற்காலத்தில் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கலாம் அல்லவா? சரி, இப்போது குதிகால் வெடிப்பு வருவதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
அளவுக்கு அதிகமான குளிர்ச்சி
உலகில் 50% மக்கள் குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு வறட்சி மட்டுமின்றி, அதிகப்படியான குளிர்ச்சியான காலநிலையும் தான் காரணம். குளிர்ச்சியான காலநிலையின் போது சருமம் சுருங்க ஆரம்பிப்பதால், வெடிப்புகள் ஏற்படக்கூடும். அதனால் தான் மலைப்பிரதேசத்தில் உள்ள மக்கள் தங்கள் கால்களுக்கு சாக்ஸ் போட்டுக் கொள்கிறார்கள். அதிலும் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இப்பிரச்சனையால் அதிக மக்கள் அவஸ்தைப்படக்கூடும். ஆகவே கவனமாக இருங்கள்.
வறட்சியான சருமம்
அனைவரும் தெரிந்த ஒன்று தான் இது. பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால், பாதங்களில் உள்ள ஈரப்பசை விரைவில் போய், வறட்சியை ஏற்படுத்தி, வெடிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் வறட்சியான சருமத்தினர், தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, தினமும் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
அதிகப்படியான எடை
உடல் எடை அளவுக்கு அதிகம் இருந்தாலும், குதிகால் வெடிப்பு வரும். இதற்கு காரணம், அளவுக்கு அதிகமான அழுத்தத்தை பாதங்களுக்கு கொடுப்பதால், பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகிறது. எனவே குதிகால் வெடிப்பைத் தடுக்க, உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டியதும் அவசியம்.
நீரில் நீண்ட நேரம் இருப்பது
நீரிலேயே நீண்ட நேரம் இருந்தால், அதனால் கால்கள் அதிகம் நீரில் ஊறி, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அனைத்தும் வெளியேறிவிடும். இதன் காரணமாக குதிகால்களில் வெடிப்புகள் ஏற்படும். மேலும் துணி துவைப்பவர்களின் பாதங்களில் வெடிப்புக்கள் அதிகம் இருப்பதற்கு இது தான் காரணம்.
அசுத்தமான வாழ்க்கை முறை
ஆரோக்கியமற்ற, அசுத்தமான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் கூட குதிகால் வெடிப்புகள் ஏற்படும். எப்படியெனில் அசுத்தமான வாழ்க்கையின் மூலம் உடலின் அத்தியாவசிய சத்துக்களை இழக்க நேரிட்டு, அதன் காரணமாக குதிகால் வெடிப்புகள் ஏற்படும்.
வெறும் காலில் சுற்றுவது
காலணி அணியாமல் வெறும் காலிலேயே எப்போதும் சுற்றினால், பாதங்களில் வறட்சியுடன், கிருமிகளும் நுழைந்து, வெடிப்புக்களை மேலும் பெரிதாக்கி, நிலையை மோசமாக்கிவிடும். ஆகவே எங்கும் காலணியுடன் சுற்றுங்கள்.