ஜோடியாக சுற்றுபவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விடும் சிங்கிள் பேச்சுலரா நீங்கள்? டோண்ட் ஒர்ரி… பி ஹேப்பி… உங்களுக்கான காதலரை/காதலியைக் கண்டுபிடிக்கவும் மருந்து வந்துவிட்டது. ‘கண்ணாடியைத் திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும்?’ என்கிற கணக்காக கன்ஃப்யூஸாக இருக்கிறதுதானே…விளக்கமாகவே பார்ப்போம் வாருங்கள்…
விலங்குகள் பிறந்தஉடனேயே தங்களின் உணவைத் தாங்களே கண்டுபிடித்துக் கொள்கின்றன. சுயசார்பாக இருக்க கற்றுக் கொண்டுவிடுகின்றன. ஆனால், மனிதன் நம்பிக்கையற்றவனாகவே இருக்கிறான். வளர்கிறான். தன்னைத் தானே பார்த்துக் கொள்ள அவனுக்குத் தெரியாது.
குறிப்பிட்ட வயதுவரை தாய்தான் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதன்பிறகும் யாரையாவது மற்றவரை சார்ந்துதான் வாழ்கிறான். மனிதனுக்குக் காதல் தேவைப்படுவதன் அடிப்படைக் காரணங்களில் இதுவும் ஒன்று.
”உண்மையில் ஒரு பந்தத்தை உருவாக்கும் முக்கியமான விஷயம் மூளையின் டோபமைன் அமைப்பில்தான் இருக்கிறது. மனதுக்குப் பிடித்த ஒருவரைக் காதலிக்கும்போது உங்கள் மூளையில் ஏற்படும் விளைவு மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. Oxytocin, Vasopressin என்னும் இரண்டு ரசாயனங்கள் சுரப்பினாலேயே மூளையின் டோபமைன் அமைப்பு காதலின்போது செயல்படத் துவங்குகிறது. உங்களுக்கானவரைக் கண்டுபிடிக்க உதவுவதும் டோபமைன் செயல்பாடே.
டோபமைனை செயல்படுத்தும் மருந்தை எடுத்துக் கொண்டால், உங்களுக்கான இணையை நீங்கள் கண்டுபிடித்து ஜோடி சேர்ந்துவிட முடியும்” என்கிறார் ஆராய்ச்சியாளர் சான்ட்பெர்க்.சரிதான்!