கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து கொட்டைப்பாக்கு அளவாவது சாப்பிட்டு வந்தால் எலும்புகளும் பற்களும் உறுதியாவதோடு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கறிவேப்பிலை
சாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கி எறிபவர்கள் தான் அதிகம். அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளையும் சேர்த்தே தூக்கி எறிகிறீர்கள் என்றுதான் அர்த்தம். வைட்டமின் ஏ, பி 1, பி 2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து உள்பட பல சத்துகள் கறிவேப்பிலையில் உள்ளன. அகத்திக்கீரைக்கு அடுத்தபடியாக கறிவேப்பிலையில்தான் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ளது.
கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து கொட்டைப்பாக்கு அளவாவது சாப்பிட்டு வந்தால் எலும்புகளும் பற்களும் உறுதியாவதோடு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். உடலில் பலவீனம் ஏற்படுவது குறையும். கண், பல் தொடர்பான நோய்கள் குணமாவதோடு, வயதான காலத்திலும் பார்வைத்திறன் மங்காமல் பிரகாசமாகத் தெரியும்.
துவையல் செய்ய நேரமில்லை என்பவர்கள், வெறுமனே கறிவேப்பிலையை மென்றே சாப்பிடலாம். கறிவேப்பிலை ஜூஸ் செய்தும் அருந்தலாம். கறிவேப்பிலையுடன் கொத்தமல்லித்தழை, புதினா, இஞ்சி சேர்த்து அரைத்து, பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து வடிகட்டி, எலுமிச்சைச்சாறு கலந்தால் கறிவேப்பிலை ஜூஸ் ரெடி! பன்றிக்காய்ச்சல், டெங்கு என பல வடிவங்களில் காய்ச்சல் வந்து பயமுறுத்தும் இந்த காலக்கட்டத்தில் சாதாரணக் காய்ச்சலோ, விஷக்காய்ச்சலோ எது வந்தாலும் கறிவேப்பிலைச் சாறு நிவாரணம் தரும்.
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், அதில் பாதி மிளகு சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் வெந்நீர்விட்டு மையாக அரைக்க வேண்டும். அதை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்த்து அரை டேபிள்ஸ்பூன் தேன் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். மீதியுள்ள மருந்தை இதேபோல மாலையில் சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் வெந்நீர் குடிக்கலாம். இதை மூன்று நாடகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் முழுமையாகக் குணமாகும்.
மனநலப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மையாக அரைத்த கறிவேப்பிலையுடன் பாதியளவு எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்து கலந்து, சாதத்துடன் சேர்த்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும். இதை பகல், இரவு எனச் சாப்பிட வேண்டியது அவசியம்.
கோடை காலத்தில் சிலருக்கு கண் இமைகளின்மேல் கட்டிகள் வரும். அப்போது, கறிவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து வெண்சங்கைச் சேர்த்து உரைத்து பற்றுப் போட்டு வந்தால், கட்டிகள் பழுத்து உடையும். கட்டிகள் உடைந்தபிறகும் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் புண்களும் ஆறிவிடும். இத்தனை நன்மைகள் கறிவேப்பிலையில் இருக்கும்போது அதை ஏன் தூக்கி ஏறிய வேண்டும்?