கோடை காலத்தில் மின் சாதனங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம். நிபுணர்கள் தரக்கூடிய தகவல்களை காணலாம்.
கோடை காலத்துக்கு அவசியமான மின்சாதன பராமரிப்புகள்
தற்போதைய வாழ்க்கை முறைகளில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்குபவையாக உள்ளன. அயர்ன் பாக்ஸ் முதல் அதிநவீன கணினி வரையில் அனைத்தும் மின்சார மயம்தான். மின்சார பயன்பாடானது, சம்பந்தப்பட்ட சாதனத்தை சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட மின்காந்த புலத்தை ஏற்படுத்துகிறது.
மனித உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கு அது பாதிப்பை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த சூழலில் மின்சார சாதனங்களை கச்சிதமாக பயன்படுத்துவது அவசியமாகும். மேலும், இந்த கோடை காலத்தில் மின் சாதனங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம். அதற்காக நிபுணர்கள் தரக்கூடிய தகவல்களில் சிலவற்றை இங்கே காணலாம்.
1. கோடை காலங்களில் குட்டி பசங்கள் அடிக்கடி திறந்து மூடும் பிரிட்ஜ் கதவு சரியாக மூடப்படாமல் இருந்தாலும், அடிக்கடி பிரிட்ஜ் கதவை திறந்து மூடிக்கொண்டிருந்தாலும் மின்சார பயன்பாடு கூடுதலாகும்.
2. தாமாகவே ‘டீ-பிராஸ்ட்’ ஆகாத பிரிட்ஜாக இருந்தால் ஐஸ்கட்டிகள் அதிகமாக ஒட்டிகொண்டு கூடுதல் கடினத்தன்மை கொண்டதாக மாறாமல் இருக்க அவ்வப்போது ‘டீப்ராஸ்ட்’ செய்வது அவசியம். அதன் மூலமாகவும் மின்சார சேமிப்பு சாத்தியமே.
3. கோடை விடுமுறைக்கு நீண்ட நாட்கள் வெளியூருக்குச் செல்லும் சமயங்களில் பிரிட்ஜ் இயங்குவதை நிறுத்தி வைப்பதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.
4. வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-யை வருடத்திற்கு இரண்டு முறைகள் சுத்தம் செய்வது அவசியம் என்று எச்.வி.ஏ.சி வல்லுனர்கள் குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏ.சி பில்டரை மாதம் ஒரு முறை சுத்தம் செய்வதன் மூலமாகவும் மின்சாரம் விரயமாவதை தவிர்க்கலாம்.
5. கோடை காலங்களில் வாஷிங் மெஷினில் துவைக்கும் பகுதியை மட்டும் பயன்படுத்தலாம். துணிகளை உலர்த்தும் ‘டிரையரை’ குளிர் அல்லது மழை காலங்களில் மட்டும் உபயோகப்படுத்தும்போது மின்சாரம் மிச்சமாகும்.
6. மின்சார மோட்டாரிலிருந்து மேல் நிலைத்தொட்டிகள் அல்லது நிலத்தடி நீர் தொட்டிகள் ஆகியவற்றுக்கு செல்லும் குழாய்களை அதிக வளைவுகள் இல்லாமல் பொருத்தினால் தண்ணீர் விரைவாக மேலேறுவதற்கு சுலபமாக இருக்கும். அதன் மூலமாகவும் மின்சார சேமிப்பு சாத்தியமே.
7. துணிகளுக்கு தண்ணீர் தெளித்து இஸ்திரி செய்வதன் மூலமும் மின்சார பயன்பாடு அதிகமாவதாக தெரிய வந்துள்ளது.
8. வீடுகளில் கணினியை பயன்படுத்தும் சமயங்களில் நீண்ட நேரம் ‘ஸ்க்ரீன் சேவர் மோடில்’ வைப்பதால் பெருமளவு மின்சாரம் செலவு ஆவதாக அறியப்பட்டுள்ளது.
9. அறைகளில் வெளிச்சம் தரும் பல்புகளின் மீதுள்ள தூசியை துடைத்து பயன்படுத்தினால், வெளிச்சம் அதிகமாவதோடு ஓரளவு மின்சாரமும் மிச்சமாகும்.
10. அறைகளை விட்டு வெளியே செல்லும்போது விளக்குகள், மின்விசிறிகள், தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் ஆகிய அனைத்து மின் சாதனங்களின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வெளியே செல்வதுதான் நல்லது.