சக மாணவர்களிடம் நம்பிக்கை தரும் சொற்களை பேசுவதன் மூலம் அவர்களுக்கு உங்கள்மீது அன்பும், மரியாதையும் அதிகரிக்கும். இதன்மூலம் அவர்கள் உங்களை தலைவராக ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள்.
மாணவர்களே நீங்களும் தலைவர் ஆகலாம்
தலைமைப்பண்பு என்பது தானாக தேடிவருவதல்ல. அதற்காக நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். நமது செயல்கள், புத்திசாலித்தனமாக பேச்சு, நடவடிக்கை பிறருடன் இணைந்து செயல்படும் அணுகுமுறை போன்றவற்றால் மட்டுமே ஒருவர் தலைவர் ஆக முடியும். நீங்கள் தலைவராக விரும்பினால், உங்கள் நண்பர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்க விரும்பினால், எதிர்காலத்தில் ஒரு குழு அல்லது ஒரு அணி அல்லது ஒரு அமைப்புக்கு தலைவர் ஆக விரும்பினால் அதற்கு தேவையான சில பண்புகளை மாணவப்பருவத்திலேயே நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த பண்புகள் குறித்து காண்போம்.
தலைமை தாங்கும் தகுதியும், பண்பும் தனக்கு இருக்கிறது என்று நம்பிக்கை கொள்வது முதல்படியாகும். அந்த தன்னம்பிக்கை இருந்தால் தான் உங்களால் தலைமை ஏற்று செயல்பட முடியும். வகுப்பில் சக மாணவர்களுடன் சகஜமாக பேசி பழகி அவர்களுடன் நட்புடன் இருப்பது, அவசியமான நேரத்தில் சக மாணவர்களுக்கு உதவுவது போன்வற்றின் மூலம் சக மாணவர்களின் அன்பையும் நட்பையும் பெற முடியும். சக மாணவர்களிடம் நம்பிக்கை தரும் சொற்களை பேசுவதன் மூலம் அவர்களுக்கு உங்கள்மீது அன்பும், மரியாதையும் அதிகரிக்கும். இதன்மூலம் அவர்கள் உங்களை தங்களது தலைவராக ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள்.
வெற்றியின் முதல்படி சுறுசுறுப்பு ஆகும். எந்த செயலையும் நாளை செய்வோம் என்று தள்ளிப்போடாமல் அன்றே செய்வது மிக அவசியம். மேலும் எந்த செயலுக்கும் பிறரின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் தாமாக செய்வது முக்கியம். எந்த நிலையிலும் பிறரை சார்ந்திருக்காமல் நீங்களே உங்கள் காரியங்களை செய்துகொள்வது உங்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
மேலும் நீங்கள் செய்ய நினைக்கும் காரியத்தை நீங்கள் விரும்பியபடி கச்சிதமாக சிறப்பாக செய்து முடிக்க இயலும். அதுபோல உங்கள் செயல்களில் தடை ஏற்படும்போது அதற்குரியவர்களிடம் அந்த தடையை நீக்குவதற்கான ஆலோசனைகளை பெறவும் தயங்க கூடாது. உங்களது சுறுசுறுப்பான செயல்களே நீங்கள் சிறந்த தலைவராக இருக்கமுடியும் என்ற கருத்தை நம்பிக்கையை பிறர் மனதில் ஏற்படுத்தும். இதன் மூலம் நீங்கள் தலைவர் பொறுப்புக்கு எளிதில் தேர்ந்துஎடுக்கப்படுவீர்கள்.
‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்’ என்பார்கள். அது மிகவும் முக்கியமாகும். எந்த நிலையிலும் பதவி வந்தஉடன் தலைக்கனம் கொண்டு செயல்படக் கூடாது. பதவி கிடைக்கும் முன்பு எப்படி இருந்தோமோ அதுபோலவே பதவி கிடைத்த பின்னரும் இருக்க வேண்டும். தலைவர் பதவியில் இருக்கிறோம் என்ற ஆணவத்தில் செயல்பட்டு மற்றவர்களை ஒதுக்கக் கூடாது.
நமது தலைவர் எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் நமக்கு உதவி செய்வார் என்ற மனநிலை மற்றவர்களிடம் ஏற்பட வேண்டும். அப்போது தான் நீங்கள் தலைவர் ஆக தொடர்ந்து நீடிக்க முடியும். பதவி கிடைத்த பின்னர் ஆடம்பரமாகவும், ஆணவத்துடன் நடந்துகொள்வதும் ஆபத்தை தரும். எனவே எளிமையான அணுகுமுறை மட்டுமே எப்போதும் பலன் தரும்.
எந்த நிலையிலும் கடமையில் இருந்து தவறக்கூடாது. உங்களிடம் ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதை நிறைவேற்றுவதில் அதிக கவனமும் அக்கறையும் தேவை. உங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கியிருப்பது கூடாது. உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் நம்பகத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும் அதில் எந்தநிலையிலும் அலட்சியம் கூடாது.
தலைவர் ஆக இருப்பவர் எப்போதும் உற்சாகம் மிக்கவராக இருக்க வேண்டும். அழுதுவடியும் முகத்துடன், சோம்பேறியாக இருந்தால் அது உடன் இருப்பவர்களையும் பாதிக்கும். சுத்தமாக உடை அணிதல், உற்சாகமாக பேசுதல், தனது காரியங்களை சுறுசுறுப்பாக செய்தல், குறித்த நேரத்தில் பணிகளை செய்தல், உடன் இருப்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசுதல், செயல்படுதல் போன்றவற்றின் மூலம் உங்கள் தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்ள முடியும்.