சாப்பிட்ட உடன் செய்யும் சில செயல்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இப்போது எந்த விஷயங்களை சாப்பிட்ட உடன் செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம்.
சாப்பிட்ட உடன் கண்டிப்பாக இந்த விஷயங்களை செய்யாதீங்க
சாப்பிட்ட உடனேயே தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏன்என்றால் சாப்பிட்ட உணவுடன் வயிறு, செரிமானத்துக்கு உடலை தயார்படுத்திக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில் தூங்க செல்வது நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். மேலும் சாப்பிட உடனேயே பகலிலோ, இரவிலோ தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத முக்கியமான பிற செயல்கள்:
* சாப்பிட்ட இரண்டு மணி நேரம் வரை, உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அது செரிமானத்துக்கு இடையூறாக அமையும். உணவு செரிப்பதும் தாமதப்படும்.
* சாப்பிட்டவுடன் குளிப்பதும் தவறு. ஏனெனில் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதற்கேற்ப கை, கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டமும் கூடும். அதன் காரணமாக செரிமானம் ஆவதற்கு வயிற்றுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு குறையும். அது வயிற்றிலுள்ள செரிமான உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். செரிமானத்தையும் தாமதப்படுத்தும்.
* சாப்பிட்டவுடனே தேநீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் சாப்பிட்டதும் தேநீர் பருகக்கூடாது. அது உடலில் உள்ள இரும்பு சத்து, தாதுச்சத்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்பானங்கள் பருகுவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு வித்திடும்.
* சாப்பிட்டவுடன் 30 நிமிடங்களுக்கு பிறகே தண்ணீர் குடிப்பது நல்லது. அவசியமாயின் சிறிது பருகலாம்.
* சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அது வயிற்று உப்புசத்திற்கு வழிவகுத்துவிடும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்தோ பழங்களை உண்ணலாம்.
* சிகரெட் பிடிப்பதும் தவறான பழக்கம். செரிமானம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் அதனுடன் கலந்து உடல்நல பாதிப்புகளை உருவாக்கும்.