27.5 C
Chennai
Friday, May 17, 2024
shutterstock 80946001 19406
ஆரோக்கிய உணவு

மீன் உணவு… இதயத்துக்கு இதம், உடலுக்கு பலம், மனதுக்கு நலம்!

நெத்திலி, வஞ்சிரம், வாளை, கெளுத்தி, கெண்டை, சுறா, இறால், காரப்பொடி…. மீன்களில்தான் எத்தனை வகை! கடல், ஏரி, குளம், ஆறு, கிணறு… எந்த நீர்நிலையில் பிறந்திருந்தாலும் மீனின் ருசிக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை. நகரத்தில் உழைத்துக் களைத்து வரும் ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு, ஒரு தட்டு சோற்றுடன் பரிமாறப்படும் ஒரு துண்டு மீன் மகா விருந்து. கடல் அன்னை அள்ளி அள்ளிக் கொடுத்த மகா கொடை. மீன் உணவு உலகம் முழுக்கப் பிரபலம். பரவலாக, அதிகம் சாப்பிடப்படும் உணவு இது என்றாலும், மீனை நம்பிப் பிழைப்பவர்கள் கோடிக்கணக்கானோர்… பலரின் வாழ்வாதாரமே மீன்தான்.
shutterstock 80946001 19406
மீன் உணவு

ஆதி மனிதன், மாமிச பட்சிணி! காடுகளில், சமவெளிகளில், பள்ளத் தாக்குகளில், மற்ற நிலப்பரப்புகளில் கிடைத்த காய், கனிகள் தவிர நீர் நிலை இருந்த இடங்களில் எல்லாம் மீன் பிடித்து உண்டு வந்தவன். மனிதன் தோன்றி, பல லட்சக்கணக்கான ஆண்டுகளான பின்னும் அவனுக்கு உணவாகிறது மீன்… அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக விளைவித்துக்கொண்டே இருக்கிறது கடல். உண்மையில் கடல் வளம் என்பது மீன் வளமே! அந்த வளம் கெட்டுப்போகக் கூடாது என்பதற்காக `மீன் பிடி தடைக்காலம்’ எல்லாம் உண்டு. 45 நாட்களுக்கு கடல் பக்கமே போக மாட்டார்கள் நம் மீனவர்கள்.

உலக அளவில் மீனை ஆதாரமாகக் கொண்டு செழித்து நடக்கும் வியாபாரம் பிரமிக்கத்தக்கது. குளம், குட்டைகளில் வளர்ப்பது, இறால் பண்ணை வைப்பது, கடலில் மொத்த மொத்தமாக வலைவீசிப் பிடித்து, அவற்றைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்வது, வீட்டில் தொட்டிகளில் காட்சிப்பொருளாக்க ஆசைப்படுபவர்களுக்காக குட்டிக் குட்டி வண்ண மீன்களை வளர்த்து விற்பது… எனச் செழித்துக் கொழிக்கிறது மீன் வியாபாரம். இறந்த பிறகும் உப்புச் சேர்க்கப்பட்டு, காயவைத்து கருவாடாகவும் உணவாகிறது இந்த அற்புத ஜீவன். சென்னை பேசின்பிரிட்ஜ் பாலத்துக்குக் கீழே இன்றைக்கும் பழம்பெருமை வாய்ந்த கருவாடு மார்க்கெட் இருக்கிறது. மொத்த, சில்லறை விற்பனைக் கடைகள் வரிசையாக இருக்கின்றன. வாசனை தாங்காமல் மூக்கைப் பொத்திக்கொண்டு நகர்கிறவர்களைப் பார்த்து, ஏளனமாகச் சிரிப்பார்கள் மீன் பிரியர்கள். இந்தக் காட்சியை இன்றைக்கும் காணலாம். காசி மேடு, ராயபுரம் கடற்கரைகளில் காலை வேளையில் போய்ப் பார்த்தால், மீனை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பார்க்கலாம்.
336914 19083
மீன்

மீன், ஆங்கிலத்தில் `ஃபிஷ்’ (Fish) என அழைக்கப்படுகிறது. இது பழைய ஆங்கிலச் சொல்லான `ஃபிஷ்க்’ ((Fisc) என்ற வார்த்தையில் இருந்து வந்தது. ஆரம்பகாலத்தில் இருந்தே மீன் வளர்ப்பு பெரிய வேலையாகவே மனிதனால் செய்யப்பட்டு வந்திருக்கிறது. தொல்லியல் துறை அடுக்கும் இதற்கான ஆதாரங்கள் மலைக்கவைக்கின்றன. நியாண்டர்தால் மனிதன் இருந்த காலத்திலேயே மீன் உணவு வழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த, பழைமையான தியான்யுவான் (Tiyanyuan) வம்சத்தைச் சேர்ந்த மனிதர்கள் மீன் உணவு சாப்பிட்டதும் அறியப்பட்டிருக்கிறது.

மீன் உணவுகள்

அது கடலோ, ஆறோ அவற்றில் இருந்து கிடைக்கும் மீன் உணவு ஆரோக்கியமானது என்பதை அறிந்திருந்தார்கள் மனிதர்கள். வேக வைத்து, வறுத்து, பொரித்து,மைக்ரோவேவ் அவனில் வைத்து என விதவிதமாக சமைத்துச் சாப்பிடப் பழகிவிட்டார்கள். குழம்பில் இருந்து பர்கர் வரை மீன் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஜப்பானில், சஷிமி (Sashimi) என்ற ஒரு வகையான மீனைப் பச்சையாகவே சாப்பிடுவார்களாம். இன்றைக்கும் ஆற்றில் துண்டையோ, வேட்டியையோ வைத்துப் பிடித்ததில் கிடைக்கும் மீனை வீடு வரை கொண்டு சென்று, சமைத்துச் சாப்பிட பொறுமை இல்லாதவர்களும் உண்டு. ஆற்றங்கரையிலேயே கிடைக்கிற சிறு குச்சிகளைக் கொளுத்தி, ஃப்ரெஷ்ஷாகச் சுட்டுச் சாப்பிடும் ருசி அவர்களுக்கு அலாதியானது. மீனின் முள் குத்திவிடாமல் சாப்பிடுவது கிராமத்தில் வாழும் மனிதர்களுக்குக் கை வந்த ஒரு கலை.

மீன் குழம்பு

நம்மை பயமுறுத்தும் சுறா மீனில் இருந்து, நம்முடன் குழந்தைபோலக் கொஞ்சி விளையாடும் டால்பின் வரை பல வகை உண்டு. மீனை மையமாக எடுத்துக் கோடிக்கணக்கான பணத்தை வசூலில் வாரிக்குவித்தது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் `ஜாஸ்’ (Jaws) என்றால், எர்னஸ்ட் ஹெமிங்வேயின் `கடலும் கிழவனும்’ (The Old Man and the Sea) நாவலில் வரும் மார்லின் மீன் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. இவ்வளவு ஏன்… மகா விஷ்ணு `மச்சாவதாரம்’ என்று மீனாகவே அவதரித்ததாக நம் புராணம் சொல்கிறது. சொல்லச் சொல்லத் தீராதது மீன் புராணம். சரி… ஓர் உணவாக மீன், சாப்பிட ஏற்றதுதானா? விளக்குகிறார் டயட்டீஷியன் பத்மினி… பத்மினி டயட்டீஷியன்

“அசைவம் சாப்பிடுபவர்களில் மீனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆடு, மாடு… என மற்ற இறைச்சிகளோடு ஒப்பிடும்போது, மீன் உணவால் அதிகத் தீங்கு இல்லை என்றே சொல்லலாம். இதில் புரோட்டீன், வைட்டமின் டி மற்றும் செலினியம் (Selinium) போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நெத்திலி போன்ற சில வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. இது, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; இதயத் துடிப்பைச் சீராக்கும்; இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும். ஆண், பெண் இருவருக்குமே உகந்தது மீன் உணவு. அதேபோல பக்கவாதம் வராமல் காக்கும்; மனஅழுத்தத்தைக் குறைக்கும். மனரீதியான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மீன் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். ஏனெனில், இதில் இருக்கும் `டி.ஹெச்.ஏ’ (DHA – Docosahexaenoic acid) எனும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடியது.

மீன் வறுவல்

மத்தி மீன் என்று ஒன்று உண்டு. இதை வாணலியில் இட்டு வறுக்கும்போதே அதில் இருந்து எண்ணெய் வடியும். அந்த எண்ணெயில் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது. உடலுக்கு எத்தனையோ நன்மைகளைத் தரக்கூடியது. இன்றைக்கும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடல்புறப் பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுறாப்புட்டு செய்து தரும் வழக்கம் உள்ளது. கண்பார்வை மேம்பட உதவக்கூடியது, சருமப் பொலிவுக்கு நல்லது, செரிமானப் பிரச்னையை அதிகம் ஏற்படுத்தாதது மீன் உணவு. அசைவம் சாப்பிடாதவர்கள்கூட, மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் மீனின் சத்துக்களை மாத்திரைகளாகவும், எண்ணெயாகவும் எடுத்துக்கொள்வது உண்டு. அதிக நாள் ஃப்ரிட்ஜில் வைத்துப் பதப்படுத்தப்படாத, வெளிநாட்டில் இருந்து வருகிறது என்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட மீன் வகைகள் வேண்டாம். உள்ளூரில் கிடைக்கும் நல்ல மீன்களை வாங்கிப் பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு நல்லது” என்கிறார் பத்மினி

சுருக்கமாக, மீன் உணவு இதயத்துக்கு இதம், உடலுக்கு பலம், மனதுக்கு நலம்!

Related posts

உங்களுக்கு தெரியுமா பன்னீர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஏலக்காயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உணவு வழக்கத்தில் மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்

nathan

கெட்ட நீரை வெளியேற்றி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் கீரையின் பெயர் என்ன தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

சூப்பர் டிப்ஸ் கெட்ட கொழுப்பை கரைக்க சோயா பீன்ஸ் சுண்டல்..!

nathan

புளி அல்ல… மாணிக்கம்!

nathan

நம் சமையல் அறையில்…சமைக்கும் முறைகள்!

nathan

இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுங்க! பல நன்மைகள் அள்ளித்தரும்

nathan

அப்பிள் பழத்தை விட….. சிறந்தது வாழைப்பழம்……..!

nathan