மனஅழுத்தம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உலைவைத்து விடும். அதை கண்டுபிடித்து, சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும்.
மனம்: நலம்.. நலமறிய ஆவல்…
மனம் அமைதியின்றி அலைபாய நேரிடுவது மன அழுத்தம் உருவாக காரணமாகிவிடுகிறது. மனம் நிம்மதியின்றி தடுமாறும்போது எதிர்மறை சிந்தனைகள் உருவாகி மனதை இறுக்கமாக்கிவிடும். மனஅழுத்தம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உலைவைத்து விடும். அதை கண்டுபிடித்து, சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும்.
மனஅழுத்தத்தை பற்றிய பல்வேறு ஆய்வுத் தகவல்கள்:
* இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
* நான்கில் ஒரு பெண் மன அழுத்த பாதிப்புக்கு இலக்காகிறார். பத்தில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்.
* நடுத்தர வயது மற்றும் முதியோரைதான் மனஅழுத்தம் தாக்கும் என்பதில்லை. டீன்ஏஜ் பருவத்தினரையும் பாதிக்கிறது. பாதிக்கப்படும் இளம் பருவத்தினரில் 45 சதவீதம் பேர் மது அல்லது போதை பொருட்களுக்கு அடிமையாகிறார்கள். அந்த அளவிற்கு மன அழுத் தம் அவர்கள் வாழ்க்கையை நிர்மூலமாக்கு கிறது.
* மன அழுத்தம் 67 சதவீதம் பேரிடம் தற்கொலை எண்ணத்தை உருவாக்குகிறது. 17 சதவீதம் பேர் தற்கொலைக்கு முயற்சி செய்வதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
* மனஅழுத்த பாதிப்பிற்குள்ளானவர்களை மீட்டெடுக்க பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இந்தியாவில் 3500 உளவியல் நிபுணர்களே இருப்பதாக தெரியவருகிறது. தேவை இதைவிட பலமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
* மனஅழுத்தத்திற்கும், மூளைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நமது பெருமூளைதான் திட்டமிடுதல், இறுதி முடிவெடுத்தல் போன்ற விஷயங்களை செய்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது பெரு மூளையின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிடும். சுறுசுறுப்பு போய் சோர்வு வந்துவிடும். அதன் தாக்கமாக எதிர்மறை சிந்தனைகள் உருவாகும். அது மன அழுத்த பாதிப்பை அதிகப்படுத்தும்.
* ‘ஹிப்போகேம்பஸ்’ எனப்படும் மூளையின் பின்மேடு பகுதி உணர்ச்சிகள், நினைவுகள், மனநிலையை சீராகவைத்திருக்க உதவும். மன அழுத்த பாதிப்புக்குள்ளாகும்போது இந்த மூளையின் பகுதி சுருங்கிவிடும். அதனால் மனஇறுக்கம் தோன்றும்.
* மூளையில் சுரக்கும் செரனோனின் எனும் ஹார்மோன் மன அழுத்தத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இது மிகவும் குறைவாக இருந்தால் மன அழுத்தம், மன நலக்கோளாறுகள் ஏற்படும். நார் எபிநெப்ரின் எனும் நரம்பு கடத்தி ஹார்மோன் அதிகமாக இருந்தால் மனச்சிதைவு ஏற்படக்கூடும். டோபமைன் என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்தால் மனஅழுத்தம் தோன்றும்.
* மனஅழுத்தம் இன்றி வாழ மனதை அலைபாயவிடக்கூடாது. மனதை அமைதிப்படுத்த தியானம் மேற்கொள்ளவேண்டும். நேர் மறையாக சிந்தித்து, செயல்படவேண்டும்.
* ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, குழப்பம் போன்றவை மன அழுத்தத்தை தோற்றுவிப்பவை. அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுபவர்களை மன அழுத்தம் எளிதில் தன்வசப்படுத்திவிடுகிறது.
* மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள் உறவுகள், நண்பர்களுடன் சேர்ந்து இருந்தாலும் தாம் தனித்திருப்பதாகவே உணருவார்கள். அதனால் உறவினர்களும், நண்பர்களும் அவர்களிடம் தனிமை எண்ணம் தலைதூக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும்.