புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு காராமணி அவசியமான ஒன்று. இன்று காராமணியை வைத்து சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான சுவையான காராமணி பூர்ண கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :
கொழுக்கட்டை மாவு – 1 கப்,
உப்பு, எண்ணெய் – சிறிது,
காராமணிக்காய் – 1/2 கப்,
தேங்காய் துருவல் – 1/4 கப்,
பொட்டுக்கடலைமாவு – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் விழுது – 1 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிது.
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சிறிது உப்பு, எண்ணெய் சேர்க்கவும்.
* கொதிக்கும் நீரில் கொழுக்கட்டை மாவை போட்டு சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கினால் கொழுக்கட்டை மாவு ரெடி.
* காராமணிக்காயை நன்றாக வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் சிறிது விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் மிளகாய் விழுது, வெந்த அரிந்த காராமணிக்காய், உப்பு சேர்த்து கிளறி தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலைமாவு தூவி கிளறி இறக்கவும்.
* விருப்பமான கொழுக்கட்டை அச்சில் மேல் மாவு வைத்து உள்ளே காராமணி பூரணம் வைத்து அடைத்து கொழுக்கட்டை தயார் செய்து ஆவியில் 15 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
* சத்தான, சுவையான காராமணி பூர்ண கொழுக்கட்டை தயார்.