இக்காலத்தில் மரணம் என்பது 50 வயதிலேயே வந்துவிடுகிறது. சொல்லப்போனால் 40 வயதை எட்டுவதே மிகவும் சிரமமாக உள்ளது. ஆனால் அக்காலத்தில் நம் முன்னோர்கள் சாதாரணமாக 100 வயது வரை வாழ்ந்ததோடு, நோயின்றி இயற்கை மரணத்தை தழுவினார்கள். இதற்கு வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களையும் காரணமாக சொல்லலாம்.
தற்போது பலரும் சொகுசு வாழ்க்கை வாழ்கிறோம் என்று இயற்கையை அழித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். ஆம் எப்படியெனில், பெரிய பெரிய கட்டிடங்களை கட்டுகிறோம் என்ற பெயரில் விவசாய நிலங்களை அபகரித்து, அங்கு விவசாயத்திற்கு பதிலாக கட்டிடங்களை கட்டி, அதில் வாழ்ந்து வருகிறோம்.
இப்படி விவசாய நிலங்களை அபகரிப்பதால், உண்ணும் உணவில் பல்வேறு கலப்படங்கள் ஏற்பட்டு, இதன் மூலம் பல நோய்களை விருந்தாளியாக அழைத்துக் கொள்கிறோம். மேலும் நமக்கு பொருந்தாத வெளிநாட்டு உணவுகளை இந்திய நாட்டிற்கு கொண்டு வந்து, அதனை அதிகமாக உட்கொண்டு வருகிறோம்.
சரி, இப்போது நம் முன்னோர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததன் பின்னணியில் உள்ள காரணங்களைக் காண்போமா!
வெளிநாட்டு உணவுகள் இல்லை
அக்காலத்தில் எல்லாம் வெளிநாட்டு உணவுகளான பிட்சா, பர்கர் போன்றவை இல்லை. இவற்றை நம் முன்னோர்கள் சுவைக்காததால் தான் என்னவோ, இவர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்துள்ளார்கள் போலும்.
சுத்தமான காய்கறிகள் மற்றும் பழங்கள்
அக்காலத்தில் எல்லாம் அனைத்து வீடுகளிலும் குட்டித் தோட்டமாவது இருக்கும். இதனால் தங்களுக்கு வேண்டிய சில அத்தியாவசிய காய்கறிகளை தங்கள் தோட்டத்தில் வளர்த்து அதனைக் கொண்டு சமைத்து சாப்பிட்டு வந்தார்கள். இதுவும் நம் முன்னோர்களின் ஆரோக்கியத்தின் ரகசியம் எனலாம். ஆனால் இக்காலத்திலோ தோட்டத்தைக் காண்பதே அரிதாக உள்ளது. பின் எங்கு ஆரோக்கியம் கிட்டும்.
வீட்டுச் சமையல் நம் முன்னோர்கள் எப்போதும் வீட்டுச் சமையலைத் தான் அதிகம் சாப்பிட்டு வந்தார்கள். இதனால் அவர்களின் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இப்போதோ, கடைகளில் விற்கப்படும் கண்ட உணவுகளை வாங்கி சாப்பிடுவது தான் அதிகம். இதனால் செரிமான மண்டலம் கெட்டுப்போனதோடு, உடல் பருமன் பிரச்சனையால் பல நோய்களை பெறுகிறோம்.
பால் மற்றும் இறைச்சிகள் நம் முன்னோர்கள் காலத்தில் ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு எல்லாம் இயற்கை தீவனங்களைத் தான் பயன்படுத்தி வளர்த்து வந்தார்கள். இதனால் ஆடு, கோழிகளில் சத்துக்களானது அதிகம் இருந்தது. ஆனால் இப்போதோ, கெமிக்கல் ஊசிகளைப் போட்டு ஆடு மற்றும் கோழிகளை வளர்ப்பதால், இதனை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய்கள் தான் வந்து சேர்கிறது.
ஓய்விற்கு நேரம் இல்லை அக்காலத்தில் எல்லாம் ஓய்வு எடுப்பதற்கெல்லாம் நேரம் இருக்காது. மேலும் ஓய்வு வேண்டும் என்று கூட தோன்றாது. ஏனெனில் அந்த அளவில் நம் முன்னோர்கள் வயல்வெளிகளில் பேசி, பாடிக் கொண்டே உழைத்தார்கள். இதனால் அவர்களின் உடலில் நோய்கள் தொற்றாமல் இருந்ததோடு, அவர்கள் தங்களின் நேரத்தை ஆரோக்கியமான வழியில் செலவிட்டனர்.
‘நோ’ வீடியோ கேம்ஸ் உட்கார்ந்த இடத்திலேயே விளையாடும் வீடியோ கேம்ஸை நம் முன்னோர்கள் விளையாடியிருக்கமாட்டார்கள். மாறாக வீர விளையாட்டுக்கள் அல்லது உடல் உழைப்பு உள்ளவாறான விளையாட்டுக்களில் ஈடுபட்டதால், அவர்கள் நோயின்றி பல நாட்கள் வாழ முடிந்தது.
இயற்கை வைத்தியம் முன்னோர் காலத்தில் எல்லாம் மாத்திரை என்பதெல்லாம் இல்லை. எல்லாம் கை வைத்தியம் தான் இருந்தது. மேலும் கை வைத்தியத்தின் மூலம் பல நோய்களை குணப்படுத்தி வந்தனர். கை வைத்தியத்தைப் பின்பற்றியதால் தான் என்னவோ, அவர்களின் உடல் பல வருடங்கள் வலிமையோடு இருந்ததோடு, எவ்விட உடலியக்க பிரச்சனைகளும் ஏற்படாமல் உள்ளது.