தற்போது சோர்வு என்ற ஒன்று பலரையும் தொற்றி, எதையும் நிம்மதியாக செய்யவிடாமல் தடுக்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்களுக்கு சோர்வு அதிகமாக உள்ளதா? அதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லையா? எப்போதும் சோர்வை உணர்வதால், உங்களுக்கே உங்கள் மீது கோபம் வருகிறதா?
அதுமட்டுமின்றி சோர்வு அதிகம் இருப்பதால், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், விருந்தினர்கள் போன்றவர்களுடன் சந்தோஷமாக நேரத்தை கழிக்கவிடாமல் செய்வதோடு, அலுவலகத்தில் கூட எளிதான வேலையை விரைவில் செய்து முடிக்காமல் செய்து, வாழும் வாழ்க்கையையே மோசமாக்கிவிடும்.
எனவே சோர்வு எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து விடுபடுவது எப்படி என சில வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கூறவிருக்கிறது. அதைப் படித்து தெரிந்து சோர்வில் இருந்து விடுபட்டு, உடலின் ஆற்றலை அதிகரித்து சந்தோஷமாக வாழுங்கள்.
சோர்வுக்கான காரணங்கள்
வேலை, பயணம், நிலையான வாழ்க்கை, வயது போன்றவற்றுடன், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளான நீரிழிவு, இதய நோய், தைராய்டு, ஆர்த்ரிடிஸ் போன்றவைகளும் எப்போதும் சோர்வுடன் இருப்பதற்கான காரணங்களாகும்.
உடற்பயிற்சி
தினமும் காலையில் எழுந்ததும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம். எனவே ரன்னிங், வாக்கிங், யோகா, சைக்கிளிங் போன்ற சிம்பிளான சில பயிற்சிகளை அன்றாடம் மேற்கொண்டு வாருங்கள். இதனால் நிச்சயம் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
தண்ணீர்
கார் எப்படி பெட்ரோல் இருந்தால் தான் இயங்குமோ, அதேப்போல் தான் உடலுக்கு தண்ணீர் போதிய அளவில் இருந்தால் தான் சீராக இயங்கும். உடலில் நீர் சரியான அளவில் இல்லாவிட்டால், உடலியக்கம் குறைந்து, மிகுந்த சோர்வை உண்டாக்கி, கவனச்சிதறலை அதிகரித்துவிடும். எனவே அவ்வப்போது தண்ணீரைக் குடித்து வாருங்கள். இதனால் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
தூக்கம்
தூக்கமின்மை சோர்வை உண்டாக்குவதோடு, ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே தினமும் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்வதோடு, ஒரே நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் உடலின் ஆற்றல் சீராக இருக்கும்.
அதிகப்படியான எடை
உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாகவே இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள்.
அடிக்கடி சாப்பிடவும்
கொஞ்சம் கொஞ்சமாக பலமுறை சாப்பிடவும் மற்றும் சிறு இடைவெளியில் ஏதேனும் ஆரோக்கியமான உணவுப் பொருளை சாப்பிட்டவாறு இருக்கவும். இப்படி சாப்பிடுவதால், உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். அதுமட்டுமின்றி காலை உணவை தவறாமல சாப்பிட வேண்டும். ஒரு நாளில் காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. காலை உணவை தவறாமல் உட்கொண்டு வந்தாலேயே, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.