உலகமெங்கும் அமைதியாக பரவி வரும் ஹெபடைடிஸ் பி வைரஸால் 370 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். உலக சுகாதாரத்தை அச்சுறுத்தும் இந்த ஹெபடைடிஸ் பி வைரஸ் குறித்த உண்மைகளைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஜூலை 28 ஆம் தேதி உலக ஹெபடைடிஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினத்தையொட்டி உலகின் பல பகுதிகளிலும் கல்லீரல் நோயைக் குறித்து விழிப்புணர்வு நடைபெறும். ஹெபடைடிஸில் பல வகைகள் உள்ளன. அதில் ஹெபடைடிஸ் பி மிகவும் ஆபத்தானது. எனவே இதனை பற்றிய சில உண்மைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
உண்மை 1 இதற்கான தடுப்பூசி இருந்தபோதிலும், ஹெபடைடிஸ் பி வைரஸ் (எச்.பி.வி) நோய்த்தொற்று ஒவ்வொரு 30-45 வினாடிகளுக்கும் ஒருவரைக் கொல்கிறது.
உண்மை 2 ஹெபடைடிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான மக்களுக்கு (கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு) தங்களுக்கு இந்த தொற்று இருப்பது குறித்து தெரிவதில்லை. இவ்வாறு இந்த அமைதியான ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று, உலக சுகாதாரத்திற்கு பெரிய அச்சுறுத்தலை விளைவித்துள்ளது.
உண்மை 3 உலகம் முழுவதும் எச்.பி.வி ஆனது எச்.ஐ.வியை விட 10 மடங்கு பரவியுள்ளது. எச்.ஐ.வி ஆப்ரிக்காவில் பரவலாக உள்ளது. அதேப்போல் எச்.பி.வி ஆசியாவில் அதிகமாக உள்ளது.
உண்மை 4 எச்.ஐ.வி வைரசானது தொற்றும் மற்றும் பரவும் தன்மை கொண்டது என்பது பொதுவான கருத்து ஆகும். ஹெபடைடிஸ் பி வைரஸ் இதனை விட 100 மடங்கு அதிகமாக தொற்றும் தன்மைக் கொண்டது.
உண்மை 5 சரியாக கண்காணிக்கப்படாத அல்லது சிகிச்சையளிக்கப்படாத ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று, கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் செயலிழப்பு ஆகியவற்றின் மூலம் 25% மக்களைக் கொல்கிறது.
உண்மை 6 ஹெபடைடிஸ் சி தொற்றானது ஹெபடைடிஸ் பி வைரஸ் போன்ற மற்றொரு வைரசால் உண்டாகிறது. இது உலகம் முழுவதும் 180 மில்லியன் மக்களை பாதிப்படையச் செய்கிறது. இந்த தொற்றிற்கு எந்த சிகிச்சையும் இல்லை. மேலும் இதற்கு எந்த தடுப்பூசியும் இல்லை
உண்மை 7 ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி இரண்டும் உலகளவில் 6 பில்லியன் மக்களில் 560 மில்லியன் மக்களை பாதித்துள்ளது.
உண்மை 8 ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் இந்த தொற்றை தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் எடுத்து செல்கின்றனர்.
உண்மை 9 சட்டவிரோதமான மருந்துகள் மற்றும் ஊசிகளை எடுத்துக் கொள்பவர்கள், இரத்தம் உறையாமையால் பாதிக்கப்பட்டவர்கள், ஓரின சேர்க்கை மற்றும் இருபால் ஆண்கள், பலருடன் பாலியல் ரீதியான தொடர்பு கொண்டவர்கள், கைதிகள், பொதுநல ஊழியர்கள், உடலில் துளை அல்லது பச்சை இட்டுக் கொள்பவர்கள் போன்றோர் ஹெபடைடிஸ் பி வைரஸ் நோய்த் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளவர்கள். அலாஸ்கா எஸ்கிமோக்கள், பசிபிக் தீவுகள், ஹைத்தியன் மற்றும் இந்தோ-சீனா குடியேறியவர்கள் ஆகியோர் உலக மக்கள் தொகையில் அதிகம் உள்ளவர்கள். இந்த பகுதிகளுக்குப் பயணிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உண்மை 10 ஹெபடைடிஸ் பி இனக்கலப்பு தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாகும். இதில் எந்த மனித ரத்தம் அல்லது ரத்தப் பொருட்கள் இல்லை மற்றும் இது மரபணு மறு பொறியியல் செயல்முறை மூலம் உருவாக்கப்பட்டது. மேலும் நல்ல பாதுகாப்பிற்கு ஆறு மாத காலத்திற்கு 3 ஊசி தேவைப்படுகிறது.