மின்சாரத்தை கவனமாக கையாள வேண்டிய அவசியமான சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் நவீன முறைகள் பற்றி தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
வீடுகளுக்கு அவசியமான மின்சார பாதுகாப்பு உபகரணம்
மின்சாரம் இல்லாத உலகத்தை கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு நமது இன்றைய வாழ்க்கை முறைகள் அதனோடு ஒன்றிவிட்டன. மின்சாரம் ஒரு ஆபத்தான சக்தி என்ற நிலையை தாண்டி அதை அன்றாட உபயோகங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் பெரும் நன்மைகளை மனித சமூகம் பெற்று வருகிறது. தவிர்க்க இயலாத சக்தியாக மாறிவிட்ட மின்சாரத்தை கவனமாக கையாள வேண்டிய அவசியமான சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் நவீன முறைகள் பற்றி தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
மின் பாதிப்பை தடுப்போம் :
எதிர்பாராத மின்சார தாக்குதல் காரணமாக உடலின் மத்திய நரம்பு மண்டலம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அதன் காரணமாக தசைகள் சுருங்கி, எதிர்ச்செயல் காரணமாக சம்பந்தப்பட்டவர் தூக்கி எறியப்படவும் வாய்ப்புள்ளது. அத்தகைய மின்சார பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க பல்வேறு உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க கருவியாக இருக்கும் ‘ஆர்.சி.டி’ எனப்படும் ‘ரெஸிடியுயல் கரண்ட் டிடெக்டர்’ அல்லது ‘ரெஸிடியுயல் கரண்ட் சர்கியூட் பிரேக்கர்’ என்ற கருவி பற்றி இங்கே காணலாம்.
மின் அதிர்ச்சி தடுப்பு :
மேற்கண்ட கருவி நமது வீடுகளில் பொருத்தப்பட்டிருந்தால், மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும் ‘எர்த்’ அல்லது ‘பேஸ்’ கம்பி முனைகள் நம்மால் தொடப்பட்டாலும் ‘ஷாக்’ அடிக்காமல் 30 மில்லி செகண்ட் கால அளவுக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். அதனால் மின்சார தாக்குதல் நமக்கு உண்டாகாமல் தடுக்கப்படுகிறது. மேலும், அந்த கருவி கச்சிதமாக இயங்குகிறதா..? என்பதை பரிசோதிக்கக்கூடிய ‘டெஸ்ட் பட்டன்’ அதில் இருக்கிறது. அதை அழுத்தும்போது ‘டிரிப்’ ஆகி மின் இணைப்பு தடுக்கப்பட்டுவிடும்.
‘எர்த் இணைப்பு’ அவசியம் :
வீடுகளில் இருக்கும் எல்லாவித மின்சார உபகரணங்களுக்கும் ‘எர்த்திங்’ எனப்படும் நில இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பது அவசியம். பொதுவாக வீடுகளுக்கு தரப்படும் மின்சார இணைப்புகளில் மூன்று விதமான கம்பிகள் இருக்கும். அவை :
1) மின்சாரம் செல்லும் கம்பி (லைவ் ஒயர்)
2) மின்சாரம் இல்லாத கம்பி (நியூட்ரல் ஒயர்)
3) பூமியில் பதித்துள்ள இணைப்பு கம்பி (எர்த்திங் கம்பி)
மேற்கண்டவற்றில் ‘எர்த்திங்’ எனப்படும் பூமியில் பதித்துள்ள கம்பியின் ஒரு முனையானது வீட்டுக்கு வெளிப்புறத்தில், ஒரு செம்பு தகடோடு இணைத்து பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருக்கும். அதன் இன்னொரு முனை வீட்டின் ‘மெயினோடு’ இணைக்கப்பட்டிருக்கும். மின்சார உபயோகத்தின்போது தவறுதலாக வேறு இடத்தில் மின்சாரம் பாய நேரும்போது மின்சக்தி ‘எர்த்திங்’ மூலம் மண்ணுக்குள் சென்றுவிடும்.
‘பிளக்குகள்’ வடிவமைப்பு :
வீடுகளில் உபயோகிக்கும் மின்சார ‘பிளக்குகளில்’ மூன்று ‘பின்கள்’ இருப்பதை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானதாகும். மேலும், அவற்றில் முதல் ‘பின்’ மட்டும் சற்று பெரியதாக இருப்பதை பார்த்திருப்போம். காரணம் அது ‘எர்த்திங் பின்’ ஆகும். ஒவ்வொரு முறையும் நாம் ‘பிளக்கை’ பயன்படுத்தும்போது மற்ற இரண்டு ‘பின்களை’ விடவும் அதுதான் மின் இணைப்பில் முன்னதாக இணைகிறது. மேலும், ‘பிளக்கை’ நாம் நீக்கும்போது கடைசியாக மின் இணைப்பிலிருந்து விடுபடுவதும் அந்த பெரிய ‘பின்தான்’. அதன் வாயிலாக நமது பாதுகாப்பு ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்தப்படுகிறது.
சரியான மின் இணைப்பு :
மின் இணைப்புகளில் ஏற்படக்கூடிய தவறுகள் இரண்டு விதமாக உள்ளன. அவை ‘ஷார்ட் சர்க்கியூட்’ மற்றும் ‘ஓவர் லோடு’ ஆகியவையாகும். தனது வழக்கமான பாதையில் இருந்து மின்சாரம் இன்னொரு இடத்தில் பாய்வது ‘ஷார்ட் சர்க்கியூட்’ ஆகும். மின்சார கம்பிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றின் தாங்கும் திறனை விடவும் அதிகப்படியான மின் அழுத்தம் ஏற்படும்போது உண்டாகும் பாதிப்புகள்தான் ‘ஓவர்லோடு’ எனப்படும். அத்தகைய பாதிப்புகள் ஏற்படும் சமயங்களிலும் நம்மை பாதுகாக்கும் கவசமாக ‘ஆர்.சி.டி’ அமைப்பு செயல்படுகிறது.