மற்றவர்களை நோக்கி எந்த ஒரு கேள்வியை கேட்கும்போதும், அப்படி ஒரு கேள்வி உங்களை நோக்கி எழுந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டு, அடுத்தவர்களிடம் கேள்வி எழுப்புங்கள்.
விருந்து வையுங்கள் குணம் தெரிந்துவிடும்
ஒருவர் பேசும் விதத்தை பொறுத்துதான் அவருடைய குணாதிசயமும், சுபாவமும் மதிப்பிடப்படுகிறது. பேச்சு எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் அறிவு பூர்வமான பேச்சு சிலரிடம் மட்டுமே உள்ளது. அடுத்தவரை புண்படுத்தாத பக்குவமான பேச்சுதான் அறிவு பூர்வமான பேச்சு. நாம் நல்லவிதமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு தேவையில்லாமல் எதையாவது பேசி, அடுத்தவரை சங்கடத்தில் ஆழ்த்திவிடக் கூடாது. பிறகு நாமே அதை எண்ணி வருத்தப்பட வேண்டியிருக்கும். பிறகு அதற்கு பல விளக்கங்கள் கொடுக்க வேண்டியதிருக்கும்.
யார் வீட்டிலாவது உங்களை விருந்திற்கு அழைத்திருந்தால் பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உணவின் ருசி எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அதை பற்றி எதுவும் குறை சொல்லக்கூடாது. ஏதாவது பதம் தவறி போயிருந்தால் அது, சமைத்த அவர்களுக்கே தெரியும். நான்கு பேர் முன்னிலையில் அதை சொல்லிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. அந்த தருணத்தில், உங்களை அழைத்தவர்களின் அன்பு, நேசம், உங்களுக்காக அக்கறையாக சமைத்து உபசரித்த விதம் இதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நான்கு பேரை வீட்டிற்கு அழைத்து சமைத்து உணவு பரிமாறுவது இப்போது சாதாரண விஷயம் அல்ல.
அந்த மாதிரியான விருந்துகளில் அவர்களின் உழைப்பிற்கு மரியாதை கொடுத்து, அதில் இருக்கும் நல்ல விஷயங்களை குறிப்பிட்டு பாராட்டலாம். உணவு பரிமாறும் நேர்த்தி, வீட்டை தூய்மையாக வைத்திருக்கும் விதம், நேரத்தோடு விருந்து தயாரித்த ஈடுபாடு போன்று பாராட்ட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதில் அவர்கள் மனம் மகிழும்படி சில வார்த்தைகளைக்கூறி பாராட்டிவிட்டு விடைபெறலாம்.
நீங்கள் சமையலில் பெரிய புலியாக இருக்கலாம். அதை குறிப்பிடும் விதத்தில், சாப்பிட்டு முடித்துவிட்டு ‘தயிர் கொஞ்சம் புளித்து விட்டது. அதான் தயிர் வடை ருசியே மாறி விட்டது’ என்று முகத்தை சுளித்துக்கொண்டு சொல்லவேண்டியதில்லை. அப்படி சொன்னால் உங்களை விருந்துக்கு அழைத்து உபசரித்த நோக்கமே அடிபட்டுபோய்விடும்.
அதுபோல், ‘இதென்ன இப்படி செய்திருக்கிறீர்கள்? நான் இதைவிட நன்றாக செய்வேன். எங்க வீட்டுக்கு வாங்க. இதை சுவையாக எப்படி செய்வது என்று நான் கற்றுத் தருகிறேன்’ என்று உங்கள் மேதாவிதனத்தையும் அங்கே வார்த்தைகளில் காட்டக்கூடாது.
சிலர் ஏற்கனவே அறிமுகமான ஒருவரை பார்த்ததும், அவர்கள் வீட்டு சூழ்நிலைகளுக்குள் மூக்கை நுழைத்து கேள்வி கேட்க தொடங்கிவிடுவார்கள். உதாரணமாக, ‘உங்க பொண்ணுக்கு வரன் அமைச்சிடுச்சா? எப்ப கல்யாணம்?’ என்பார்கள். நான்கு பேர் முன்னால் அவர் நின்றுகொண்டிருக்கும்போது இந்த கேள்வி அவரை சங்கடப்படுத்தலாம். ஏன்என்றால், சுற்றி நிற்கும் நான்கு பேரும் அதை தொடர்ந்து துணைக்கேள்விகளை கேட்கத் தொடங்கிவிடுவார்கள். ‘இன்னும் உங்க பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லையா? நீங்கள் இத்தனை வயது ஆனபின்பும் மாமனார் ஆகவில்லையா? உங்க பொண்ணுக்கு தோஷம் ஏதேனும் இருக்கிறதா?’ என்றெல்லாம் கேள்விகள் நீண்டுகொண்டே போகும். இத்தகைய கேள்விகளை யாரும் விரும்பமாட்டார்கள்.
அதுபோல் சற்று வயதானவர்களை பார்த்து, ‘இந்த வயதிற்கு மேல் இதெல்லாம் உங்களுக்கு தேவையா’ என்பார்கள். அப்படியென்றால் வயதாகிவிட்டால், எதையும் செய்யக் கூடாதா? எதையும் பேசக்கூடாதா? மூலையில் போய் முடங்கிக்கொள்ள வேண்டுமா?
நமது ஒவ்வொரு உறுப்பும் நன்றாக செயல்படவேண்டும். நன்மைபயக்கும் விதத்தில் செயல்படவேண்டும். அதனால் பார்க்கும்போதும் கவனமாக பாருங்கள். அடுத்தவர்களுக்கு உறுத்தல் தரும் விதத்தில் பார்க்கவேண்டாம். பேசும்போதும் கவனமாக பேசுங்கள்.
அடுத்தவர்களை காயப்படுத்தும் விதத்தில் பேசவேண்டாம். மற்றவர்களை நோக்கி எந்த ஒரு கேள்வியை கேட்கும்போதும், அப்படி ஒரு கேள்வி உங்களை நோக்கி எழுந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டு, அடுத்தவர்களிடம் கேள்வி எழுப்புங்கள். அதுவே சரியாக இருக்கும்.