தினமும் அரை மணி நேரம் ஓடுவது, பிறகு யோகா, டயட் என உடல் எடையை குறைக்க பாடுபவர்கள், கண்டுகொள்ளாத விஷயம் அவர்கள் உண்ணும் உணவு. ஆம், டயட்டில் இருப்பதோடு நாம் சில உணவுகளை உண்டால், உடலிலுள்ள கெட்ட கொழுப்பு விரைவில் கரைந்து விடும். ‘ஃபேட் பர்னிங்’ (Fat burning) காய் மற்றும் கனி வகைகளை அன்றாடம் நம் உணவு பட்டியலில் சேர்த்து கொள்வது நல்லது.
1. எலுமிச்சை
இந்த பட்டியலில் முதல் இடம், எலுமிச்சைக்குதான். எலுமிச்சையில் ’வைட்டமின் சி’ சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி நிறைந்த அனைத்து உணவுகளுமே, கொழுப்பைக் கரைக்க கூடியவை. காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சை ஜூஸ் கலந்து குடித்தால், உடலிலுள்ள கழிவுகளை அகற்றும். வைட்டமின் சி சத்து, கொழுப்பை கரைக்கும் வேலையை செய்யும். இது மட்டுமல்லாமல், தொடர்ந்து எலுமிச்சை சாறு அருந்தி வந்தால், இருமல், சளி, தலைவலி, அஜீரண கோளாறு ஆகியவை வராமல் தடுக்கும்.
2. சோம்பு
சோம்பில் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் கலோரிகளும் குறைவுதான். உடலில் செரிமான சக்தியை அதிகப்படுத்தும். இரவு உறங்குவதற்கு முன்பு, சோம்பை வெதுவெதுப்பான நீரில் ஊர வைத்து, காலையில் அந்த நீரைக் குடிக்க வேண்டும். அதேபோல, ஹெவியான உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பை மென்று திண்ணலாம்.
3. கிரீன் டீ
கிரீன் டீயில், வேறு எந்த உணவிலும் காண முடியாத அளவு ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்களை காணலாம். இதில் பாலிஃபினால் (polyphenol) எனப்படும் சத்துக்களும் நிறைந்துள்ளன. சர்க்கரை இல்லாமல் தினமும் கிரீன் டீ பருகி வருவது உடலிலுள்ள கொழுப்பை உருக செய்யும். இதிலுள்ள இதர சத்துக்கள் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தக் கூடியது. தினமும் கிரீன் டீ பருகுவதால், கொழுப்பைக் கரைப்பதோடு, நம் உடலையும் பாதுகாக்கும்.
4. தர்பூசணி
தர்பூசணி முழுக்க முழுக்க நீர்ச்சத்து நிரம்பியது. இதுதவிர, தர்பூசணியில் ஏராளமான அளவு வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன. இது உடல் எடையைக் குறைக்க உதவும். தர்பூசணி கொழுப்பை நம் உடலில் சேர விடாமல் தடுக்கும். தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, டயட்டோடு அவசியம் சேர்த்து கொள்ள வேண்டிய உணவு தர்பூசணி.
5. குறுக்காக வெட்டி பயன்படுத்த கூடிய காய்கறிகள்
இதை ஆங்கிலத்தில் க்ருசிஃபெரஸ் (cruciferous vegetables) என்று அழைப்பர். அதாவது, குறுக்காக வெட்டினால் இந்த காய்கறி வகைகளைப் பயன்படுத்த முடியும். காலிஃபிளவர், முட்டைக்கோஸ், பிராக்கோலி போன்ற காய்கறிகள் இவ்வகையை சேர்ந்தது. இதில் நார்ச்சத்துகளும் அதிகம். இதிலுள்ள ஆண்டிஆக்ஸிடண்ட், கொழுப்பைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
இனிமேல், உங்கள் உணவில் இந்த ஐந்து உணவுகளும் இடம் பெறட்டும்!