பெண்களே மின்சாரத்தை எப்படி சிக்கனமாக செலவு செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டு பலன் பெறுங்கள்.
பெண்களே மின்சாரத்தை மிச்சப்படுத்துவது எப்படி தெரியுமா?
ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தமிழக அரசு சில நாட்கள் முன்பு அறிவித்தது. நிறைய பேருக்கு யூனிட் என்றால் என்னவென்றே தெரிவதில்லை. ஒரு யூனிட் என்பது எவ்வளவு மின்சாரம் என்பதும் தெரியவில்லை. ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு என்று கணக்கிட்டே மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றை தெரிந்து கொண்டால் தான் மின்சார சிக்கனம் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.
ஒரு ஆயிரம் வாட்ஸ் தேவைப்படும் ஒரு மின் சாதனத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தினால் எடுத்துக்கொள்ளும் மின் அளவே ஒரு யூனிட் ஆகும். உதாரணத்திற்கு ஆயிரம் வாட்ஸ் கொண்ட இண்டக்ஷன் குக்கரை சொல்லலாம்.
தினமும் டி.வி 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும். கிரைண்டரை விட மிக்சிக்கு அதிக மின்சாரம் தேவை. தினமும் ஒரு மணி நேரம் மிக்சியை உபயோகித்தால் மாதம் 15 யூனிட் செலவாகும். கம்ப்யூட்டரை தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரம் செலவாகும்.
பிரிட்ஜை சரியாக உபயோகித்தால் பெருமளவு மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். பிரிட்ஜை சுவரை ஒட்டி வைக்காமல் சுவரில் இருந்து 20 செ.மீ. தள்ளி வைக்கவும், அடிக்கடி அதனை திறந்து மூட வேண்டாம். உள்ளே வைக்கும் பொருளை மூடி வைக்கவும். சூடான பொருளை ஆறிய பின் வைக்கவும். வெளியூர் செல்லும்போது மட்டும் பிரிட்ஜை ஆப் செய்து வைத்தால் போதும்.
ஏ.சி. என்றால் சரியான ஏ.சி.யை தேர்ந்தெடுக்க வேண்டும். அறையின் அளவு 100 சதுர அடி என்றால் 1 டன், 100 முதல் 150 சதுர அடி வரை என்றால் 1.5 டன், அதற்கு மேல் என்றால் 2 டன் ஏ.சி. என்பதே சரியான அளவு. குண்டு பல்புக்கு பதில் எல்.இ.டி. பல்பை பயன்படுத்தலாம். 60 வாட்ஸ் குண்டு பல்ப் தரும் வெளிச்சத்தை 6 வாட்ஸ் எல்.இ.டி. பல்ப் தந்து விடும்.
மின் விசிறிகளில் எலக்ட்ரானிக் ரெகுலேட்டரை பயன்படுத்துவது மின்சாரத்தை மிச்சப்படுத்தும். இவற்றை செய்து பாருங்கள். அடுத்த மாத மின்சார கட்டணம் வெகுவாக குறைந்திருப்பதை உணர்வீர்கள்.