27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
image of object
ஆரோக்கியம் குறிப்புகள்

நாப்கினுக்கு குட்பை!

நேற்று இல்லாத மாற்றம்: சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம் மே28: 40 ஆண்டுகளுக்கு முன் பெண்கள்

மாதவிடாய் நாட்களுக்கு பழைய துணிகளையே பயன்படுத்தி வந்த நிலை மாறி, இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்பொருளில் முதலாவதாக இடம்பெற்றிருக்கிறது சானிட்டரி நாப்கின். ஆனால், இன்றளவும் நம்நாட்டில் கிராமப்புற ஏழைப் பெண்கள் சானிட்டரி நாப்கினை பயன்படுத்த வசதியற்ற நிலையில் இருப்பது வருத்தமான விஷயமே. பெண்களின் மாதவிடாய் மற்றும் இனப்பெருக்க சுகாதார மேம்பாட்டு ஆராய்ச்சியைத் தொடரும் Menstrual Aid Innovations அமைப்பின் இணை நிறுவனரும் மருத்துவ அதிகாரியுமான டாக்டர் ஃபர்ஸானா இப்பிரச்னைக்குத் தீர்வு கண்டுபிடித்திருக்கிறார். நாப்கின் பிரச்னைக்கு மாற்றாக தாங்கள் கண்டுபிடித்த Boondh Cup பற்றி பெருமையுடன் பேசுகிறார் ஃபர்ஸானா.

“2013ல் வடமாநிலமான உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது நான் தன்னார்வ குழு ஒன்றோடு இணைந்து மீட்புப்பணிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் பாரதி கண்ணனின் நட்பு கிடைத்தது. நாங்கள் இருவரும் மீட்புப்பணியில் ஈடுபட்ட போது, பெண்கள் தங்கள் மாதவிடாய் நாட்களில் படும் துயரத்தைக் கண்டோம். களிமண், பேப்பர் போன்ற பொருட்களை அப்பெண்கள் பயன்படுத்தும் அவலத்தைப் பார்த்து பெரும் கவலை ஏற்பட்டது.

இந்தியாவில் 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதாகவும், 88 சதவிகித இந்தியப் பெண்கள் மாதவிடாய் சுகாதாரத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. அப்போதுதான் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றியது. இருவரும் இந்தியா, இலங்கை நாடுகளில் பயணம் செய்து இது சம்பந்தமான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தோம். எங்களுடைய அடுத்த கட்ட பயணமாக சமூக நிறுவனமான Menstru Aid Innovations 2015ல் உருவாகியது.

இப்போது பரவலான பயன்பாட்டில் இருந்துவரும் சானிட்டரி நாப்கின் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், வளர்ந்த நாடுகளிலும் கூட எந்த ஒரு சானிட்டரி நாப்கினும் பாதுகாப்பானது என்பதற்கான சான்றுகள் இல்லை. பிரபலமான நிறுவனங்களின் சானிட்டரி நாப்கினில், இன்டர்நேஷனல் சேஃப்டி ஸ்டாண்டர்ட் நிர்ணயம் செய்ததைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமான நுண்ணுயிரிகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக மீள் சுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கலர் போக்கும் ரசாயனங்கள் (Bleach), ஜெல், டயாக்சின் போன்றவையும் கலக்கப்படுகின்றன. இதில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக கலக்கப்படும் Hexachlorodibenzofuran (HXCDF) என்ற ரசாயனமும் நோய் தடுப்பாற்றலையும் கருத்தரித்தல் திறனையும் குறைப்பதோடு, கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் காரணமாகிறது.

ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக 15 ஆயிரம் சானிட்டரி நாப்கின்களை உபயோகிப்பதாக ஆய்வு கூறுகிறது. நாளொன்றுக்கு 9 ஆயிரம் டன் நாப்கின் கழிவுகள் சேர்கின்றன. பொதுவாகவே சானிட்டரி நாப்கின்கள் பாதுகாப்பற்ற முறையில் மற்ற பொருட்களோடு குப்பை போலவே வீசப்படுவதால் தெருநாய்கள் அவற்றை இழுத்து வெளியே போட்டு கிருமித் தொற்றுகள் ஏற்படுகின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள் மக்கும், மக்காத குப்பை என பிரித்தெடுக்கும் வேலையை பெரும்பாலும் கைகளால் செய்வதால் அவர்களுக்கும் தொற்றுநோய் ஏற்பட காரணமாகிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்ட நாங்கள் சுகாதாரமான முறையில் பயன்படுத்தக்கூடிய ‘Menstrual cup’ ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினோம். பார்தி இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். நான் என்னுடைய மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தனியாக பயிற்சி செய்து கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் செய்து வந்த வேலையை விட்டு, இதற்கான ஆராய்ச்சியைத் தொடர்ந்தோம். அதன் விளைவாகத் தோன்றியதே ‘Boondh’ (இந்தியில் துளி’ என அர்த்தம்).

ஏற்கனவே இதுபோன்ற Menstrual cupகள் சந்தையில் கிடைத்தாலும் அவை 800 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரைகூட விற்கப்படுகின்றன. ஏழைப் பெண்களும் பயன்படுத்தும் வகையில் பூந்த் கப்பை 300 ரூபாய் முதல் 400 வரை விற்கிறோம். ஒரு பெண் ஒரே கப்பை 15 வருடங்கள் வரையிலும் மறு உபயோக முறையில் பயன்படுத்தலாம். இதனால் செலவு மிகக் குறைவு. இந்தியப் பெண்களுக்கேற்ற வகையில் சிலிகான் மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கிறோம். பயன்படுத்துவது எளிது. பணிக்கு செல்லும் பெண்கள் இடையில் மாற்ற வேண்டிய அவசியமில்லை. காலை 8 மணிக்கு வைத்துக் கொண்டு சென்றால், மாலை வீடு வந்தபிறகு மாற்றினால் போதுமானது. முதல் இரு நாட்களுக்கு சற்று அசவுகரியமான உணர்வு ஏற்பட்டாலும், பின்னர் பழகிவிடும்.

சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும்போது அதை அணிந்து கொண்டு யோகா, நீச்சல் போன்றவற்றில் ஈடுபடுவது கடினமாக இருக்கும். மென்ஸ்டுரல் கப் வைத்துக் கொண்டு நீச்சல் உள்பட நார்மலாக எந்தவொரு வேலையையும் செய்யலாம். உதிரப்போக்கு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு உள்ளவர்கள் கூட ஒரு நாளைக்கு 4 முறை இதை மாற்றினால் போதுமானது. உபயோகிக்கும் முன்னர் வெந்நீரில் ஸ்டெரிலைஸ் செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும்.

நூறு சதவிகிதம் சுகாதாரமானதும் பயன்படுத்துவதற்கு எளியதுமான மென்ஸ்டுரல் கப் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துவதில்லை” என்கிற ஃபர்ஸானா, இப்போது பெங்களூரில் ஆதரவற்ற புற்றுநோயாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்புகளை நடத்தி வருகிறார். பெண்கள் சுகாதாரம் சம்பந்தமான ஆராய்ச்சிகளை தோழிகள் இருவரும் தங்கள் முழுநேரப் பணியாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

email id: farzana@28red.in
bharti@28redif.in

1. பூந்த் கப்பை அணியும் முறை

ஸ்டெப் 1:5 நிமிடம் கொதிக்கும் நீரில் பூந்த் கப்பை ஸ்டெரிலைஸ் செய்ய வேண்டும் (மாதம் ஒரு முறை).

ஸ்டெப் 2: அதை சுத்தமான இடத்தில் வைத்துவிட்டு, உங்கள் கைகளை சோப்பு தண்ணீரில் சுத்தமாக கழுவ வேண்டும்.

ஸ்டெப் 3:படத்தில் இருப்பது போல மடிக்க வேண்டும்.

`C’ மடிப்பு.

1. பூந்த் கப்பை உங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு எதிர் எதிரான பக்கங்களை மடிக்க வேண்டும்.
2. மீண்டும் பாதியாக மடிக்கும் போது மேலே உள்ளது போல ‘C’ வடிவத்தில் இருக்கும். இப்போது ஒரு பாகத்தை மேலிருந்து கீழாக,கீழ் நோக்கி அழுத்தவும்.மடித்த பாகத்தை மேலே உள்ள படத்தில் இருப்பது போன்று கூர்மையான பாகத்தை மேல்நோக்கி மடித்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 4:இப்போது அதே நிலையில் கப்பை அந்தரங்க உறுப்பின் உட்புறமாக பொருத்தி விடவும். கப் சரியாக பொருத்தப்பட்டிருந்தால் வெளியே தெரியாது. உள்ளே பொருத்தப்பட்டவுடன் அதன் நெகிழ்வுத் தன்மையால் பழையபடி விரிந்து கொள்ளும். இப்போது சரியாக பொருந்தியிருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள முடியும்.

2. பூந்த் கப்பை வெளியே எடுக்கும் முறை

ஸ்டெப் 1:

கைகளை சோப்பு தண்ணீரால் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

ஸ்டெப் 2:

பூந்த் கப்பின் நுனியை ஒரு விரலால் தொட்டு உணர்ந்து சரியான நிலைக்கு திருப்பிக் கொள்ளவும்.

ஸ்டெப் 3:

மெதுவாக வெளியே இழுக்க ஆரம்பிக்கவும். மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக அசைத்து வெளியே நகர்த்தி பக்கவாட்டில் அழுத்தம் கொடுக்கவும். இப்போது எளிதாக வெளியே எடுக்க முடியும்.

ஸ்டெப் 4:

வெளியே எடுத்த பின்னர், சிறிதளவு சோப்பு கலந்த தண்ணீரில் கழுவி மீண்டும் உபயோகப்படுத்தலாம்.
image of object

Related posts

குளித்து முடித்ததும் ஏன் ஒருவருக்கு வியர்க்கிறது தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

உங்களுக்கு டைம்க்கு பீரியட்ஸ் ஆகலையா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

அழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா??

nathan

ஏன் தெரியுமா? குள்ளமாக இருப்பவர்களால் வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியாது

nathan

gas trouble symptoms in tamil – வாயு பிரச்சனை

nathan

இந்த 5 ராசிக்காரங்க பிரச்சனைனாவே ஓடி ஒழிஞ்சிப்பாங்களாம்…

nathan

படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

புரிந்து கொள்ள முடியாத பெண்களின் பழக்கவழக்கங்கள் -ஆண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan