சுகாதாரம்
வீடு சுத்தமானால் போதும் என்கிற நினைப்பில் கழிவுகளையும் குப்பைகளையும் தெருவில் கொட்டுகிறோம். அந்தக் குப்பைகளில் பெண்கள் உபயோகித்துத் தூக்கி எறிகிற நாப்கின்களை அதிக அளவில் பார்க்கலாம். குப்பைகளை அள்ளுவோருக்கு அவற்றை அப்புறப்படுத்துவதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கும் என்பதைப் பற்றி யாருமே யோசிப்பதில்லை. இதற்கொரு தீர்வு கண்டுபிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த அனிஷா நிசானி.’ஸ்வச்’ (Svachh) என்கிற பெயரில் இவர் தொடங்கியுள்ள முயற்சியின் மூலம், சானிட்டரி கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பைகள் தயாராகின்றன!
சுத்தத்தையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தற ஒரு சின்ன முயற்சிதான் ஸ்வச். சானிட்டரி கழிவுகளை அப்புறப்படுத்தறதுல இந்தியப் பெண்களோட பார்வையை மாத்தணும்கிறதுதான் நோக்கம். அதோடு, இதைத் தயாரிக்கிற பெண்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வழியாகவும் இருக்கு. குப்பை அள்ளுகிறவங்களுக்கும் சின்னதா ஒரு நிம்மதியைக் கொடுக்க முடியும்கிற திருப்தி கிடைக்குது…” என்கிற அனிஷா, ஆப்பிரிக்காவில் பிறந்து, சென்னையில் வளர்ந்தவராம்.
பிபிஏ முடிச்சிட்டு, ஃபேஷன் ரீடெயில்ல மாஸ்டர்ஸ் டிகிரி பண்ணினேன். மேபெல், லெவி, ேலண்ட்மார்க் மாதிரி பிரபல பிராண்டுகள்ல வேலை பார்த்துட்டு, எங்கக் குடும்ப பிசினஸான பிரிஷா காஸ்மெட்டிக்ஸை பார்த்துக்க ஆரம்பிச்சேன். இப்பவும் பார்த்துக்கிட்டிருக்கேன். சுற்றுச்சூழலுக்கு உதவற மாதிரி ஏதாவது பண்ணணும்… அது ரீடெயில் பிசினஸா இருக்கணும். அதிக முதலீடு தேவைப்படாததா இருக்கணும்… உழைக்கத் தயாரா இருக்கிற பெண்களுக்கு வருமானத்துக்கு வழி காட்டற மாதிரியும் இருக்கணும்… இப்படி எனக்குள்ள நிறைய ஆசைகள்… அப்பதான் சானிட்டரி சுகாதாரம்கிற விஷயம் எனக்குப் பெரிசா தெரிஞ்சது.
நம்ம நாட்டைப் பொறுத்த வரை உபயோகிச்ச சானிட்டரி வேஸ்ட்டுகளை யாருமே பாதுகாப்பா, அடுத்தவங்களை முகம் சுளிக்க வைக்காம அப்புறப்படுத்தறதில்லை. ரொம்ப நாளா என்னை உறுத்திக்கிட்டிருந்த அந்த விஷயம்தான் சானிட்டரி கழிவுகளை அப்புறப்படுத்தற டிஸ்போசபிள் பைகள் தயாரிக்கிறதைப் பத்தி யோசிக்க வச்சது. சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதா இருக்கணும்கிறதால, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை வச்சே இந்தப் பைகளைத் தயாரிக்கவும் முடிவு பண்ணினேன். ஸ்வச் உருவானது அப்படித்தான்.
உபயோகிச்ச நாப்கின்களை டாய்லெட்ல போட்டு ஃபிளஷ் பண்றதால, அடைப்பு ஏற்படுது. இல்லைன்னா அதை சரியாக்கூட மூடாம அப்படியே தெருவுல தூக்கிப் போடறாங்க. தெருவுல உள்ள நாய்கள், அதை கவ்விட்டு வந்து குதறிப் போடறதைப் பார்க்கறோம். பார்க்கிற நமக்கே இதெல்லாம் அருவெறுப்பா இருக்கிற போது, அதை அப்புறப்படுத்தற வேலையில இருக்கிறவங்களோட மனநிலை எப்படி இருக்கும்? அப்படி சிலர்கிட்ட பேசினபோது, பெரும்பாலும் அவங்க வெறும் கைகளால அப்புறப்படுத்தறது தெரிஞ்சது.
பாவமில்லையா அவங்க? இந்த மாதிரிக் கழிவுகளை அப்புறப்படுத்தற அவங்களுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலால ஏகப்பட்ட நோய்கள் தாக்கும் அபாயமும் இருக்கு…” – வருத்தத்துடன் சொல்பவர், அதற்கான புள்ளிவிவரங்களையும் விரல் நுனிகளில் வைத்திருக்கிறார். உலக சுகாதார நிறுவனம் துப்புரவுப் பணியாளர்களை ஆய்வு பண்ணினதுல, அவங்கள்ல 80 சதவிகிதத்தினருக்கு பார்வைக் கோளாறும், 73 சதவிகிதத்தினருக்கு சுவாசக் கோளாறும், 51 சதவிகிதத்தினருக்கு குடல் தொடர்பான பிரச்னைகளும், 40 சதவிகிதம் பேருக்கு சருமத் தொற்றும் அலர்ஜியும் இருக்கிறது கண்டுபிடிக்கப்
பட்டிருக்கு.
என்னோட இந்த சின்ன முயற்சி மூலமா, முதல் கட்டமா துப்புரவுப் பணியாளர்களை நேரடியா இந்தக் கழிவுகளை தொடறதைத் தடுக்கச் செய்ய முடியும். இந்தப் பைக்குள்ள உபயோகிச்ச நாப்கினை போட்டு, கொஞ்சமும் வெளியில தெரியாதபடி மூடிடலாம். அதனால அது வெளியில கசிய வாய்ப்பில்லை. சின்ன விஷயம்தான். இதுக்காக நான் பெரிய பாராட்டுகளையோ, அங்கீகாரங்களையோ எதிர்பார்க்கலை. துப்புரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொருத்தரும் மனசார என்னை வாழ்த்துவாங்க. அது போதும்…” என்கிறார் நெகிழ்ச்சியாக.
சென்னையில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தே இந்த முயற்சியை செயல்படுத்துகிறார் அனிஷா.
அந்த என்.ஜி.ஓக்களை சேர்ந்த பெண்கள்தான் இந்தப் பைகளைத் தயாரிக்கிறாங்க. பழைய நியூஸ்பேப்பரையும் பைகள் செய்யத் தேவையான பொருட்களையும் அவங்களுக்குக் கொடுத்துடுவேன். அவங்க உருவாக்கிற ஒவ்வொரு பைக்கும் கைமேல காசு. அது விற்கற வரைக்கும் காத்திட்டிருக்கிறதெல்லாம் கிடையாது. ஒரு வருஷ வருமானத்தோட ஒரு பகுதியை இந்த மாதிரி பைகள் வாங்க வசதியில்லாத பெண்களுக்கு நாப்கின் வாங்கிக் கொடுக்கப் பயன்படுத்துவேன். அதுல ஒரு மனநிறைவு கிடைக்குது…” – அக்கறையாகப் பேசுகிற அனிஷாவுக்கு இந்தத் திட்டம் ஆரம்பத்திலேயே வெற்றியைத் தந்துவிடவில்லை.
இந்தப் பையோட விலை வெறும் 2 ரூபாய். ஆனா, இதை வாங்க வைக்கிறது எவ்வளவு பெரிய சவால் தெரியுமா? குப்பையில எறியப் போற பொருளுக்கு எதுக்கு 2 ரூபாயை செலவழிக்கணும்னு கேட்பாங்க. அடுத்து சாதாரண பேப்பர்ல பண்ணின பைக்கு ஏன் இந்த விலைனு கேட்பாங்க. அதுக்குப் பின்னாடி உள்ள உழைப்பையோ, நல்ல நோக்கத்தையோ புரிஞ்சுக்க மாட்டாங்க. அதையெல்லாம் கடந்துதான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.
இந்த இடத்துல நான் என் குடும்பத்தாருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். என் மாமியார் எனக்குப் பெரிய சப்போர்ட். நான் இந்தப் பைகளோட தரத்தை டெஸ்ட் பண்ணினதும் அதை பேக் பண்றது அவங்கதான். அப்புறம் என் கணவர், என் பெற்றோரோட ஊக்கமும் உதவிகளும். எந்த ஒரு சின்ன விஷயத்துக்கும் குடும்பத்தோட ஆதரவும் அரவணைப்பும் இருந்தா பெரிய லெவலுக்கு கொண்டு போக முடியும்.
சானிட்டரி கழிவுகளை அப்புறப்படுத்தற துப்புரவுத் தொழிலாளர்களோட இப்போதைய நிலைமை மாறணும். அவங்க முகம் சுளிக்காம அப்புறப்படுத்தற நிலையை ஒவ்வொருத்தரும் ஏற்படுத்தணும். அவங்களோட ஆரோக்கியம் மேம்படணும். ஒவ்வொரு பெண்ணும் நாப்கின் வாங்கறதை வாடிக்கையா வச்சிருக்கிற மாதிரி, அதைப் பாதுகாப்பான முறையில அப்புறப்படுத்தற இந்தப் பைகளையும் வாங்கணும். இதெல்லாம்தான் என் லட்சியங்கள்…” என்கிற அனிஷாவின் சுகாதாரப் பயணத்தில் நாமும் இணைவோம்.