ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில் விழுவதும், காதலை கடந்து போவதும் சகஜம்.
பெண் தனது கடந்த கால காதலை கணவரிடம் சொல்லலாமா?
ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில் விழுவதும், காதலை கடந்து போவதும் சகஜம். சிலர் திருமணத்தில் இணைவர், பலர் வேறு ஒருவருடன் திருமணத்தில் இணைவர். ஒருவரை காதலித்து மற்றொருவரை மணக்கும் பெண் ஆரம்பம் முதலே குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறாள். காதலனை எப்படி மறக்க என்பது ஒரு பக்கம் என்றாலும் அக்காதலை கணவனிடம் சொல்லவா மறைக்கவா என்ற கேள்வி ஒரு பக்கம் !!
ஒரு பெண் தனது கடந்தகால காதலை கணவனிடம் சொல்ல முடியுமா? சொன்னால் நிலைமை என்ன? சொல்லாமல் மறைத்தாலும் என்றாவது ஒரு நாள் யாரோ ஒருவரின் மூலமாக கணவனின் காதுக்கு விஷயம் தெரியவரலாம். யார் மூலமோ தெரிந்து பிரச்சனையாவதை விட நாமே சொல்லிவிடுவது பெட்டர் என்று சில பெண்கள் சொல்லிவிடுகிறார்கள். அவ்வாறு சொன்ன ஒரு பெண்ணின் நிலை இன்று மிக பரிதாபம்.
சந்தேகம் கொண்டு தேளாய் கொட்டுகிறான் கணவன், உறவினர்களிடம் போனில் பேசினாலும் ‘அவன்கிட்ட தானே பேசுற, உருகி உருகி காதலிச்சிட்டு எப்படி மறக்க முடியும்?’ ‘அவன விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிகிட்ட அப்போ அவனுக்கு உண்மையா இல்ல, இப்போ எனக்கு மட்டும் எப்படி உண்மையா இருக்க முடியும்?’ ‘காதல் எதுவரை கை வரையா இல்ல அதுக்கு மேலயா?’ என்று வித விதமான கொடிய வார்த்தைகளால் தினமும் அர்ச்சனை. துன்புறுத்தல் தொடர இப்போது விவாகரத்துதான் ஒரே முடிவு என்ற நிலை.
இன்றைய சூழலில் பல குடும்பங்களில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இச்சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என்பது ஆண் பெண்ணின் பரஸ்பர புரிதலை பொறுத்து அமைகிறது. ஆண்களின் கடந்த காலம் எப்படி இருந்தாலும் அட்ஜெஸ்ட் செய்து வாழ பெண்கள் பழகிக் கொள்வார்கள்.
நம் சமூகத்தில் ஆண்கள் பலருடன் நட்பாக இருக்கலாம், காதலிக்கலாம், சில பல திருமணங்கள் கூட செய்து கொள்ளலாம். அவர்களின் மதிப்பு எவ்விதத்திலும் குறைவதில்லை. நான் ஆம்பளை என்பதில் அடங்கிவிடுகிறது அத்தனையும்…! ஆனால் பெண்கள் தாங்கள் காதலித்ததையே மறைத்தாக வேண்டும்!!
காதல் வயப்பட்டவள் என்றால் அவள் இங்கே மதிப்பிழந்தவளாக கருதப்படுகிறாள். பெண் என்பவள் ஒருவனுக்காகவே பிறந்து அவனுக்காகவே வாழ்ந்து அவனுடனே இறந்து விடவேண்டும் என்ற ஆழ்மன புதைகுழியில் இருந்து இன்னும் வெளிவரவில்லை இந்த சமூகம். காதல் அனுபவம் உண்டா என்று கணவன் கேட்கும் போது என்ன செய்வது என யோசிக்கிறீர்களா? இந்த கேள்வி வந்தவுடனே உஷாராகி விட வேண்டியதுதான். பரந்த உள்ளம் கொண்ட ஒரு ஆண் தன் மனைவியின் கடந்த காலத்தை ஆராய விரும்ப மாட்டான்,
திருமணத்திற்கு முன் பல நம்மை கடந்து சென்றிருக்கும். பெற்றோரின் கருத்து வேறுபாடுகள், யாரோ ஒருவரின் தவறான தொடுதல், ஏமாற்றம், தோல்வி இப்படி ஏதாவது இருக்கலாம் இதை எல்லாம் அப்படியே சொல்லிவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிகழ்கால நிம்மதியான வாழ்க்கைக்கு ஆண், பெண் யாருடைய கடந்த (கசந்த)காலமும் தேவையில்லை.
இது உங்கள் இருவருக்கும் மட்டுமேயான ஒரு புதிய வாழ்க்கை. இதில் தேவையற்றபழையன கழிதல் வேண்டும். இந்த வாழ்க்கையில் குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் இவர்களுடன் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை பற்றிய பேச்சுக்கள் மட்டும்தான் கணவன் மனைவியரிடம் இருக்க வேண்டும்.
கண்ணைவிட்டு மறைந்த கடந்த காலம் பற்றிய கவலை இன்றி
கண்ணுக்கே தெரியாத எதிர்காலம் பற்றிய அதிக எதிர்பார்ப்பும் இன்றி
கண்முன் தெரியும் நிகழ்காலத்தில் எவ்வாறு சந்தோசமாக வாழ்வது என்பதை பற்றி மட்டுமே நினையுங்கள்…
பேசுங்கள்… வாழ்வு வளமாகும்…