தேவை அதிக கவனம்
ஸ்டீராய்டு என்பது உள்ளே எடுத்துக் கொள்கிற மருந்துகளில் மட்டுமல்ல… வெளிப்பூச்சு மருந்துகளிலும் கலக்கப்படுவது பலருக்கும் தெரியாது. ஸ்டீராய்டு கலப்பினால்தான் சம்பந்தப்பட்ட சருமப் பிரச்னை சட்டென குணமாகிறது. உட்கொள்கிற ஸ்டீராய்டு மட்டும்தான் ஆபத்தானதா? சரும நோய்களுக்கு பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு களிம்புகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? சரும நோய் நிபுணர் வானதி திருநாவுக்கரசு விளக்குகிறார்.
“1950ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே மேற்பூச்சு ஸ்டீராய்டு (Topical steroid) சரும நோய்களுக்கான பயன்பாட்டுக்கு வந்தது. சரும ஒவ்வாமை, பூச்சிக்கடி, தடிப்புகள் மற்றும் படர்தாமரை போன்ற வற்றுக்கு மருந்துக்கடைகளிலிருந்து நேரிடையாகவோ, பொதுநல மருத்துவரிடம் காண்பித்தோ பொதுவான களிம்பை (General ointment) வாங்கித் தடவிக் கொள்வார்கள்.
இந்தக் களிம்புகளில் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு, ஒரு பூஞ்சை எதிர்ப்பு, ஒரு கிருமிநாசினி ஆகியவற்றுடன் ஒரு ஸ்டீராய்டு என்று 4 வகை மருந்துப் பொருட்களின் கலவை இருக்கும். கடைகளில் கிடைக்கும் ஸ்டீராய்டு கலந்த ஜெல், ஆயின்ட்மென்ட், கிரீம் போன்றவற்றை பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்களிலேயே, அவை சரியாவது போலத் தோன்றும். இதனால், மருத்துவரின் அறிவுரையின்றி தாங்களாகவே வருடக்கணக்கில் உபயோகிப்பவர்களும் உண்டு.
ஸ்டீராய்டு கலந்த மற்றொரு பொருள் சிவப்பழகு கிரீம். இந்திய மக்களுக்கு கருமைநிற சருமமே இயற்கையானது. தங்கள் நிறத்தை சிவப்பாக மாற்றிக்கொள்ள நினைக்கும் பெண்களோ, ஸ்டீராய்டு கலந்த சிவப்பழகு கிரீம்களை வாங்கி உபயோகிக்கின்றனர். ஆரம்ப நாட்களில் முகம் பளிச் வெள்ளையாக மாறும். தொடர்ந்து உபயோகிக்கும் போது சருமத்தின் நிறம் மங்க ஆரம்பித்து கருப்பாகிவிடும். சிலருக்கு வெளிறி ரத்த நாளங்கள் கூட வெளியே தெரிய ஆரம்பிக்கும். நிறைய பருக்களும் தோன்ற ஆரம்பிக்கும்.
பாதுகாப்பான முறையில், மேல்பூச்சு ஸ்டீராய்டுகளை அவற்றின் வலிமைக்கு (Strength) தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும். அதிக ஆற்றல் வாய்ந்த ஸ்டீராய்டு கலந்த கிரீம்கள், களிம்புகள் மற்றும் சிவப்பழகு கிரீம்களை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வரும்போது பக்க விளைவுகள் ஏற்படும். வைரஸ் தொற்று கள் அதிகமாகிவிடும். கண்களைச் சுற்றிலும் கரும்படலம் படிந்துவிடக்கூடும். கண்களின் க்ளோக்கோமாவில் (Glaucoma) அழுத்தம் ஏற்பட்டு காட்டராக்ட் சதை வளர ஆரம்பிக்கும். வாயைச் சுற்றிலும் உள்ள சருமத்தில் தடிப்புகள் தோன்றி சிவப்பான திட்டுகள் ஏற்படும். மூக்கின்மேல் சருமத்தில் சொரசொரப்பாகி கருக்க ஆரம்பிக்கும்.
படர்தாமரை நோய்க்காக அதிக ஆற்றலுள்ள ஸ்டீராய்டு களிம்புகளை தொடர்ந்து உபயோகிக்கும் போது நோய் மேலும் தீவிரமடைந்து இடுக்குப் பகுதிகளில் உள்ள மேல்தோல் வலுவிழக்க ஆரம்பிக்கும். இதனால் நிரந்தரமாக அந்த இடத்தில் அடையாளங்கள் தங்கிவிடும். சரும நிறமும் வெளுத்துவிடும். ரத்தநாளங்களால் கிரகிக்கப்படுவதால் உடலின் உட்புறத்தில் ஊடுருவும் வாய்ப்பு உண்டு.
ஸ்டீராய்டு கிரீம்களின் உபயோகத்தால் எடை கூடுதல், மாதவிடாய் காலம் தவறுதல், தலைவலி, அதிக வியர்வை மற்றும் மன அழுத்தநோய்களும் உண்டாகின்றன. ஸ்டீராய்டு களிம்புகளில் லேசான, மிதமான, ஆற்றல்மிக்க மற்றும் மிகவும் ஆற்றல்மிக்க என 4 வகைகள் உள்ளன. ஒரு சரும நோய் நிபுணரால் மட்டுமே நோயாளியின் சருமத்தின் தன்மைக்கேற்றவாறு ஆயின்ட்மென்டின் ஆற்றல் அளவையும் (Strength), உபயோகிக்கும் காலம் மற்றும் வேளைகளையும் பரிந்துரைக்க முடியும். மருத்துவர் சொன்ன காலத்தை விடவும், அளவை விடவும் அதிகமாக உபயோகிப்பவரும் உண்டு. மாறாக சிலர் ஸ்டீராய்டுக்கு பயந்து கொண்டு அளவு குறைவாகவும், நாட்களை குறைத்தும் உபயோகிப்பர். இரண்டுமே தவறானது” என்று கூறும் மருத்துவர் அதற்கான அளவு முறையையும் விளக்குகிறார்.
“உபயோகிக்கும் முறையில் ‘விரல் அலகு’ என்ற அளவு பயன்படுத்தப்படுகிறது. பெரியவர்களின் ஆள்காட்டி விரலின் முதல் ரேகை வரை உள்ளதே விரல் அலகு என்று கூறப்படுகிறது. ஒரு விரல் அலகு களிம்பைக் கொண்டு 300 செ.மீ. சதுர அடி அளவுக்குத் தடவலாம். நோயின் ஆரம்ப நாட்களில் உபயோகிக்கும் வேளைகளையும் நாட்களையும் அதிகமாக்கி படிப்படியாக குறைத்துவிடுவோம். நடுவில் சில நாட்கள் நிறுத்தியும் விடுவோம். தொடர்ந்து மருத்துவரிடம் வராமல் நோயாளிகள் தாங்களாகவே பயன்படுத்தத் தொடங்கிவிடுவதும் தவறானதே.
ஸ்டீராய்டு கிரீம் 50க்கும் அதிக சரும நோய்களுக்கு ஒரு அருமருந்து. சில நேரங்களில் ஸ்டீராய்டு மருந்து உயிர் காக்கும் மருந்தாக உட்கொள்வதற்கும் கொடுக்கப்படுகிறது. அம்மை போன்று தோற்றமளிக்கும் ஒரு வகையான பெம்பிகஸ் வல்காரிஸ் (Pemphigus vulgaris) மற்றும் அதீத எதிர்ப்பு சக்தியாக சருமத்தை நோக்கி செயல்படுகிற Autoimmune disorders போன்ற நோய்களால் பாதிக்கபட்டவர்களின் உயிரை காப்பாற்றுவது ஸ்டீராய்டுதான். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதே ஸ்டீராய்டு மருந்து விஷயத்தில் உண்மை. சரியான மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இவற்றைப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது” என்று அறிவுறுத்துகிறார் வானதி திருநாவுக்கரசு.