மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் கடல் போல் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. பெரும்பாலான சாலைகள் இடுப்பளவு மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் நலன் கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
மீட்புப் பணிகளில் தமிழக அரசும் பங்கேற்றது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பல வீடியோக்களை இணையத்தில் பார்த்திருக்கிறோம். குறிப்பாக சென்னையில் பள்ளிக்கரணையில் அதிக சேதம் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதே போன்று வேளச்சேரியில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் கண்கலங்க செய்தது. அதில் தாய் நாய் ஒன்று மழையில் நனைந்த படி வெள்ளநீரில் கடும் சிரமப்பட்டு தன் குட்டியை வாயில் கவ்விய படி தூக்கி சென்றது. அம்மா என்றாலே அரவணைப்பு என்று தெரியும். இது அனைத்து ஜீவராசிகளுக்கும் சமம் என அவ்வபோது இது போன்ற சம்பவங்கள் நிரூபித்து வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மழை வெள்ளத்தில் குட்டியை காப்பாற்றிய தாய் நாய்❤️! #CycloneMichuang #dog #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/3cCW5iP8Ua
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 4, 2023