பாமினி, ஊட்டச்சத்து அலோசகர்
எல்லா சீசனிலும் எளிய விலைக்குக் கிடைக்கும் வாழை மற்றும் பப்பாளிப் பழங்கள், மிகப் பெரிய வரப்பிரசாதங்கள்.
வாழைப்பழம்
உடல் எடையை ஏற்ற நினைப்போருக்கு வாழை சிறந்தது.
கலோரிகள் நிறைந்தது. எந்த வேளையில் சாப்பிட்டாலும் உடனடி ஆற்றலைத் தரும்.
உடல் எடை குறைந்த குழந்தைகளுக்கு, ஆறு மாதத்திலிருந்தே கொடுக்கலாம்.
பொட்டாஷியமும் மக்னீசியமும் நிறைந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத்தைப் பலப்படுத்தும்.
எலும்பு வளர்ச்சிக்கும் உதவும். எலும்பு தேய்மானம் அடையாமல் தடுக்கும்.
குடல் தொடர்பான பிரச்னை, வாயுத் தொல்லை, வயிற்றுப் புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
வாழையில் டிரிப்டோபேன் (Tryptophan) என்ற கூட்டுப்பொருள் செரட்டோனினை தூண்டச் செய்து, அமைதியான மனநிலையை உருவாக்கும்.
பெக்டின் (Pectin) என்ற நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை குணமாகும்.
எவ்வளவு சாப்பிடலாம்?
தினமும், அனைத்து வயதினரும் சாப்பிட வேண்டிய பழம் இது. ஒரு நாளைக்கு 50 முதல் 75 கிராம் வரை சாப்பிடலாம்.
சாப்பிடும் முறை?
தனியாகச் சாப்பிடலாம், மிளகு தூவி சாப்பிடலாம்
ஃப்ரூட் சாலட்டில் சேர்க்கலாம்
நல்ல செரிமானச் சக்தியுடையோர் மட்டும், வாழைப் பழ மில்க்க்ஷேக் செய்து சாப்பிடலாம்.
எப்படித் தேர்ந்தெடுப்பது?
கறுப்பு, பிரவுன் நிறப் புள்ளிகள் இல்லாத பழமாகப் பார்த்து வாங்க வேண்டும்.
மிதமான அளவில் பழுத்தவையே, சாப்பிட உகந்தது.
வாங்கும்போதே, பாதிக் காயாகவும் பாதிக் கனியாகவும் தேர்ந்தெடுக்கலாம். இல்லையெனில், ஒரே நாளில் பழுத்து வீணாகிவிடும். 45 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம். ஃபிரிட்ஜில் வைக்கத் தேவை இல்லை.
பப்பாளி
சருமத்துக்கு நண்பன். பருக்கள், சருமத் தொற்றுப் பிரச்னைகளை நீக்கி, சருமத்தின் நிறம், தன்மையைப் பாதுகாக்கும். தொடர்ந்து சாப்பிடுவது, சருமத்தில் பூசுவதன் மூலமே பலன் கிடைக்கும்.
நார்ச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். மாரடைப்பு வருவதைத் தடுக்கும். ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிறைந்து இருப்பதால், இளமையைத் தக்கவைக்கும். மலச்சிக்கலைப் போக்கும், செரிமானத்துக்கு உதவும். இறைச்சி சமைக்கும்போது அதில் பப்பாளிக்காயைச் சேர்த்தால், இறைச்சி மிருதுவாகவும், எளிதில் செரிக்கவும் உதவும்.
குறைந்த கலோரி என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது.
காலை எழுந்தவுடன் மூச்சுத்திணறல், வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னை இருப்பவர்கள், தினமும் ஒரு துண்டுப் பப்பாளி சாப்பிடலாம்.
மூட்டு வலி மற்றும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். உடலில் எதிர்பாற்றலைக் கூட்டும். மாதவிலக்கு பிரச்னையைத் தீர்க்கும். சீரற்ற சுழற்சியைச் சரியாக்கும்.
எவ்வளவு சாப்பிடலாம்?
வாரத்தில் மூன்று முறை, அனைத்து வயதினரும் சாப்பிடலாம். அளவு 50 75 கிராம் வரை இருக்கலாம்.
சாப்பிடும் முறை…
தனியாகவும் சாப்பிடலாம். எலுமிச்சை சாறைப் பிழிந்தும் சாப்பிடலாம்.
ஃப்ரூட் சாலட்டில் சேர்க்கலாம்.
எப்படித் தேர்ந்தெடுப்பது?
பாதி மஞ்சள் நிறமாகவும் பாதி பச்சை நிறமாகவும் வாங்க வேண்டும்.
பப்பாளியின் காம்பு மஞ்சளாக இருந்தால், அதை வாங்கிச் சென்ற சில நாட்களில் பழுக்கும். பச்சையாக இருந்தால், பப்பாளி பழுக்காது.
விரல்களால் மெதுவாக அழுத்திப் பார்க்கும்போது, மிருதுவாக இருந்தால், அவை பழுத்தவை. கடினமாக இருந்தால், அது பழுக்காத காய்.