இன்று பெரும்பாலான வீடுகளில் சாதத்துடன், ஊறுகாயோ அப்பளமோ ஏதேனும் ஒரு சைடுடிஷ் இருந்தால் போதும் என்று நினைக்கின்றனர். தானியம், பருப்பு,காய்கறிகளில் ஏதாவது ஒரு துவையல், பொரியல், பச்சடி, என அன்றாட உணவில் ஆரோக்கியமான சைடுடிஷ் ஒன்று அவசியம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ‘இதை எல்லாம் செய்ய எங்க நேரம்’ என்று கவலைப்படத் தேவை இல்லை. நொடியில் தயாரிக்கலாம். சத்தாகச் சாப்பிடலாம். ஹெல்த்தியான, சுவையான சில சைடுடிஷ்களைச் செய்துகாட்டியிருக்கிறார் சமையல் நிபுணர் ராஜகுமாரி. அதன் பலன்களைத் தருகிறார் டயட்டீஷியன் பிரியங்கா.
பீட்ரூட் பச்சடி
தேவையானவை: பீட்ரூட் – 1, இஞ்சி – சிறியது, பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை, பச்சை மிளகாய் – 1, கெட்டி தயிர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பீட்ரூட், இஞ்சி இரண்டையும் தோலைச் சீவி, மெல்லியதாகத் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பவுலில், பீட்ரூட் துருவல், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, பெருங்காயத் தூள் தூவி, தயிரைச் சேர்க்கவும். இதே முறையில் பீட்ரூட்டுக்குப் பதிலாக, வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, கேரட் சேர்த்துச் சாப்பிடலாம்.
பலன்கள்: அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படும். மேலும், கோலின், புரதம், கொழுப்பு, கார்போஹைட்
ரேட்ஸ், நார்ச்சத்து இதில் ஓரளவு கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்னை வராது. பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து இருப்பதால், பற்கள், எலும்புகளுக்கு நல்ல உறுதியைத் தரும். சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
வாழைத்தண்டு – வேர்க்கடலை பொரியல்
தேவையானவை: வாழைத்தண்டு -1, வேர்க்கடலை – 2 கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை,தேங்காய் துருவல், மோர் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மோரில் போட்டுவைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு, மஞ்சள் தூள், உப்பு, வேர்க்கடலை சேர்த்துக் கிளறி மூடிவைக்கவும். நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பலன்கள்: கோடையில் சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் தடுக்கும். உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரதம் இருப்பதால் தசைகள் உறுதியாகும். நார்ச்சத்து, நீர்ச்சத்து இருப்பதால், நல்ல ஜீரண சக்தியைத் தரும். மலச்சிக்கல் வராமல் காக்கும்.
கொள்ளு துவையல்
தேவையானவை: கொள்ளு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 2, பச்சை மிளகாய் – 1, புளி – நெல்லிக்காய் அளவு, பூண்டு – 2 பல், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் – தலா 1, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,
செய்முறை: கொள்ளை சிவக்க வறுத்து ஆறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.
வறுத்த கொள்ளு, வதக்கிய கலவையுடன் புளி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் துவையலாக அரைக்கவும்.
சூடான சாதத்தில் நெய் விட்டு, துவையல் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
பலன்கள்: வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்திருக்கிறது. சிறிய அளவில் கொழுப்பு, கரோட்டின், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்ஸ், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்தும் இதில் உள்ளது. உடலில் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், இந்த துவையல் சாப்பிட்டதும், நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.