இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நாளை தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 46 நாட்களில் 48 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து உலக கோப்பை தொடரை நடத்தியது. இருப்பினும், முதல் முறையாக இந்தியா சொந்தமாக உலகக் கோப்பையை நடத்துகிறது.
தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்தை அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளை கேட்டு தயவுசெய்து என்னை நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்.” எனப் பதிவிட்டுள்ளார்.