ஜிம்முக்கு போகாமலே ‘ஜம்’ முனு ஆகலாம்!
ஃபிட்னஸ்
உடல் எடை, தொப்பை பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுபவர்களும், அதைக் குறைக்க அதிகம் மெனக்கெடுபவர்களும் பெண்களே. ”உண்மையில், எடையைக் குறைக்க ஜிம்தான் வழி என்பதில்லை. உணவுப் பழக்கமும், வீட்டில் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளுமே உங்கள் உடலின் தேவையில்லாத கொழுப்பைக் கரைத்து, கண்ணாடி முன் ‘சிக்’கென நிறுத்தும்!” என்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் சைனி…
சாப்பிடக் கூடாதவை!
”சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் வொர்க் அவுட் செய்து பயனில்லை. எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியல் இது…. இனிப்புகள், ஜூஸ் வகைகள், மைதாவில் செய்த உணவுகள், டீப் ஃப்ரை உணவுகள், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகள் மற்றும் கோதுமை, பார்லி, சாதம் என குளுட்டன் புரதம் அதிகம் உள்ள உணவுகள். இந்த புரதம், நிறைய பேருக்கு ஃபுட் இன்ஃபெக் ஷனை உண்டு பண்ணும். இதனால ஸ்கின் பிரச்னைகள் நிறையவே வரும். ஆகவே, இதை தவிர்க்கலாம். மேலும் அசைவ உணவுகள், தேவைக்கும் அதிகமான பால், அப்பளம், ஊறுகாய், சிப்ஸ், வாரத்தில் ஒரு நாள் இட்லி, தோசை தவிர்க்கவும்.
சாப்பிட வேண்டியவை!
காலை வேளையில் பழங்கள் சாப்பிட லாம். அக்ரூட், பாதாம் போன்றவற்றை ஒரு நாளைக்கு ரெண்டு அல்லது மூன்று என்ற அளவில் சாப்பிடலாம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். தயிர் தவிர்த்து, மோர் நிறைய குடிக்கலாம். மதியம் சாதத்தைக் குறைத்து 300 கிராம் அளவில் காய்கறிகள் எடுத்துக்கொள்ளவும். தினமும் வேறு வேறு வகையான காய்கறிகள், பழங்கள் என எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது, ஒருநாள் பச்சைக் கீரை சாப்பிட்டால், மறுநாள் பர்பிள் முட்டைகோஸ் சாப்பிடலாம். முதல் நாள் ஆரஞ்சு சாப்பிட்டால், மறுநாள் மாதுளை சாப்பிடலாம். பயறு வகைகளைத் தவிர்த்து, பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
மாலை நேரம் லெமன், கிரீன் டீ குடிக்கலாம். இரவு வேளையில் வேகவைத்த காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவை குழம்பு மற்றும் கிரேவியாக இல்லா மல், கபாப் போன்று டிரையாகச் செய்து சாப்பிடலாம். எண்ணெய் உணவுகளைக் குறைக்க வேண்டுமே தவிர, முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. அது சரும வறட்சியை உண்டாக்கும் என்பதால், ஒரு நாளைக்கு 4 டீஸ்பூன்வரை எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம்.
தூக்கமின்மையும் காரணம்… குண்டாக!
சரியாகத் தூங்கவில்லை என்றால், அதிகமாக எடைபோடும் என்பதை அறிவீர்களா?! ஆம்… சரியான தூக்கம் இல்லை என்றால் ஹார்மோனல் இம்பேலன்ஸ் உண்டாகும். இதனால் அதிக இனிப்புகள் எடுத்துக்கொள்ளத் தோன்றுவதுடன், சாப்பாட்டின் அளவையும் அதிகரிக்கத் தோன்றும். எனவே, அதிகபட்சம் இரவு 10 மணிக்குள் உறங்கி, காலை 6 மணிக்கு விழிப்பது நல்லது. தினமும் உடலுக்கு குறைந்தது 8 மணி நேரத் தூக்கமாவது அவசியம்.
உடல் எடை அதிகரிக்க..!
எடையைக் குறைக்கப் போராடுபவர்கள் போலவே, எடையை அதிகரிக்கும் முயற்சியில் இருப்பவர்களும் இங்கு அதிகம். அவர்களுக்கான உணவுப் பரிந்துரையையும் பார்க்கலாம். சீத்தாப்பழம், சப்போட்டா, ஆப்பிள், வாழைப்
பழம், மில்க்ஷேக், தினமும் 15 பாதாம், சோயா மில்க், லஸ்ஸி, கடலைமிட்டாய், எள்ளு உருண்டை,
டிரை ஃப்ரூட்ஸ், அசைவ உணவு… இவற்றை எல்லாம் சந்தோஷமாகச் சாப்பிடலாம்.
சிப்ஸ், சமோசா, பாப்கார்ன் போன்றவற்
றில் தேவையில்லாத கொழுப்புகள் இருக்கும் என்பதால், அந்த வகை ஸ்நாக் அயிட்டங்களைத் தவிர்க்கலாம். வாரத்துக்கு மூன்று நாட்கள் மீன் சாப்பிடுவது, தேங்காய் எண்ணெயில் சமைத்த உணவுகளை உண்பது, தேங்காய்த் துருவலை உணவில் அதிகம் பயன்படுத்துவது… இவை எல்லாம் சருமத்துக்கு மினுமினுப்பு கொடுக்கும். ரெண்டு டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் தினமும் சாப்பிடலாம்.
மொத்தத்தில், உடல் எடை கூடுவதும் குறைவதும் உணவுக் கட்டுப்பாட்டிலும், உங்கள் ஈடுபாட்டிலும்தான் இருக்கிறது!” – வலியுறுத்தி முடித்தார் சைனி.
கே.அபிநயா, படங்கள்:அ.பார்த்திபன்
பார்ட்டி, ஃபங்ஷனுக்கு முன்…
”ஏதாவது விசேஷங்கள், பார்ட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்றால்… அதற்கு முந்தைய இரண்டு, மூன்று நாட்களுக்கு வழக்கமான இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், குழம்பு, பொரியல் என்ற உணவுகளைத் தவிர்த்து, முழுக்கப் பழங்கள் மற்றும் காய்கறிகளை வயிறு நிரம்ப சாப்பிடவும். குறிப்பாக வெள்ளரி, ஸ்பினாச், தக்காளி, மின்ட், லெமன், மாதுளை, கேரட் ஜூஸ்களை அதிகமாக எடுத்துக்கலாம் (சர்க்கரை நோயாளிகள் மற்றும் மாதவிடாய், கர்ப்பப்பைக் கோளாறு உள்ள பெண்கள் தவிர்க்கவும்). கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துக்கொள்ளாததால் உடல் எடை அதிகமாகத் தெரியாது என்பதுடன் சருமமும் பளபளப்பாகும்” என்று பரிந்துரைக்கிறார், சைனி.
”டயட்டுடன் உடற்பயிற்சியும் அவசியம்!”
சென்னை, பிங்க் ஃபிட்னஸ் சென்டரின் ஃபிஸியோ டிரெய்னர் மைதிலி, ”ஒபீஸ், வாட்டர் பாடினு ஒவ்வொருத்தரும் அவங்களோட உடல்பிரச்னைக்கு ஏற்ற பயிற்சிகளைச் செய்யணும். பொதுவா டயட்டில் இருக்கும்போது உடலில் உள்ள கொழுப்பு குறையும்; உடலில் உள்ள வாயு வெளியேறும். இதனால வெயிட் குறைஞ்சிருந்தாலும், சதை எல்லாம் தொளதொளப்பா இருக்கிறதால பார்க்க நல்ல ரிசல்ட் கிடைக்காது. அதனால, டயட்டுடன் உடற்பயிற்சியும் இணையும்போதுதான் லூஸாகும் சதையெல்லாம் டைட் ஆகி, ஃபிட்டா தெரியும்.
வீட்டிலேயே வொர்க்அவுட் செய்ய நினைக்கிறவங் களுக்கு வாக்கிங் நல்ல சாய்ஸ். அரை மணிநேர வொர்க் அவுட்டுக்கு அப்புறம்தான் வெயிட் குறைய ஆரம்பிக்கும் என்பதால, ஒரு மணி நேரமாவது நடக்கணும். Abs curl crunches, Cycling, Back extension, Cat and camel போன்ற பயிற்சிகளை, நெட்டில் பார்த்துச்செய்யலாம். இவை எல்லாம் பேஸிக் பயிற்சிகள்தான் என்பதால், தவறாக செய்தாலும் பாதிப்பு எதுவும் இருக்காது” என்கிறார்.