மகாபாரதத்தில் அபிமன்யு சக்கரவியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வதை கருவில் இருக்கும் போது தந்தை அர்ஜுனன் தன் அம்மாவிடம் கூறிக் கொண்டிருந்ததை கேட்டு அறிந்துக் கொண்டான் என கூறப்பட்டிருந்தது. ஆம், இது உண்மை தான்.
கருவில் வளரும் சுசு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு தாய் மற்றும் தாயை சுற்றி இருக்கும் சூழல், நபர்களின் பேச்சை கேட்க துவங்குகிறது. பேசுதல் மட்டுமின்றி, தீண்டுதல், தியானம் மற்றும் விளையாட்டுகள் மூலமாக கூட கருவில் வளரும் சிசுவுடன் தொடர்புக் கொள்ள முடியும்….
பேசுதல்
குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு தாய் பேசுவது மட்டுமின்றி, தாயை சுற்றி இருப்பவர்கள் பேசுவதையும் கூட சிசுவால் அறிய முடியும். இதனால் தான் கர்ப்பிணி பெண் இருக்கும் போது நல்லதையே பேசுங்கள் என கூறுகிறார்கள். தாய் தன் சிசுவோடு பேசுவதால் இருவருக்கும் மத்தியிலான பிணைப்பு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.
விளையாட்டு
கருவில் வளரும் சிசுவோடு நீங்கள் விளையாடவும் செய்யலாம். கர்ப்பிணி தன் வயிற்றில் கைவைத்து விரல்களால் ஆங்காங்கே மெல்ல தட்டலாம், கண்டிப்பாக ஏதேனும் ஒரு இடத்தில் சிசுவிடம் அசைவுகள் தெரியும். இவ்வாறு விளையாடுவதன் மூலமும் சிசுவோடு பிணைப்பு ஏற்படுத்தலாம்.
குளுமையான பொருள்
விரல் வைத்து தட்டி விளையாடுவது போல தான் இதுவும். கர்ப்பிணி பெண் வயிற்றில் சற்று குளுமையான பொருளை வைத்தும் கூட சிசுவின் அசைவுகளோடு தொடர்பு கொள்ள முடியும்.
தியானம்
தியானம் செய்யும் போது கர்ப்பிணியின் கண் அசைவு, இதயத்துடிப்பு, மூச்சு விடுவது போன்ற செய்கைகளோடு சிசு தன் அசைவுகள் மூலம் தொடர்புக் கொள்ளும். சிசுவை தொடர்புக் கொள்ள தியானம் ஒரு சிறந்த வழி.
கடிதங்கள்
நீங்கள் உங்கள் சிசுவுடன் பேச நினைப்பதை எல்லாம் கடிதமாக எழுந்துங்கள். உங்கள் குழந்தையின் வருகையை எண்ணி நீங்கள் எவ்வளவு பேரார்வம் கொண்டிருக்கிறீர்கள், அவருக்காக நீங்கள் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறீர்கள் என்பதை கடிதங்களாக எழுதுங்கள்.
காணொளிப்பதிவு
இந்த டிஜிட்டல் யுகம் கண்டிப்பாக உங்கள் குழந்தைக்கு நீங்கள் சிறந்த பரிசுகள் அளிக்க பயனுள்ளதாக இருக்கும். சிசுவோடு சேர்ந்து நீங்கள் வளரும் அந்த பத்து மாதக் கால வளர்ச்சியை காணொளிப்பதிவுகளாக உருவாக்குங்கள். இது பின்னாட்களில் பார்க்கும் போது ரம்மியமாக இருக்கும்.
தயாரிப்பு
உங்கள் குழந்தைக்கான சின்ன, சின்ன உடைகள், தங்குமிடம், குடில் போன்றவற்றை நீங்கள் உங்கள் கையால் தயாரித்து வையுங்கள். இது தாய், சேய் மத்தியிலான உறவில் பெரும் பிணைப்பை உருவாக்கும்.