நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களின் கூட்டே மனித உடல். பஞ்ச பூதங்களில் ஒன்றான மண் கொண்டு நம் உடலுக்கான சிகிச்சை செய்யும்போது, பலன்கள் பெரிய அளவில் கிடைப்பது உறுதி. வரலாற்றில், உலகப் பேரழகி என்று சொல்லப்படும் கிளியோபாட்ரா போன்றவர்கள் கூட தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், சரும பராமரிப்பிற்கும் மண் தெரப்பியைதான் செய்து வந்தனர்.
“உடலுக்கு மட் தெரப்பி செய்யும்போது, மண்ணுக்குள் இருக்கின்ற பாசிட்டிவ் எனர்ஜி நம் உடலுக்கும் கிடைக்கும். நோய்களும் சரியாகும். மண்ணில் நிறைய வகைகள் உள்ளன. பெரும்பாலும் சிகிச்சைக்குப் பயன்படுத்துவது களிமண் மற்றும் சிவப்பு மண். மண்ணுடன் மஞ்சள், வேப்பிலை, துளசி, புதினா, கற்றாழைப் பொடி போன்ற மருத்துவப் பொக்கிஷங்கள் சேர்ந்த கலவையாகத் தயாரித்துப் பூசுவதால், ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.” என்கிறார் இயற்கை மருத்துவர் குமரேசன்.
எப்படி பூசுவது?
களிமண் அல்லது சிவப்பு மண்ணில் மூலிகை சேர்த்து உடலில் பூசவேண்டும். வெந்நீர் கலந்து செய்யப்படும் மட் பேக் ஆக இருந்தாலும், குளிர்ந்த நீர் கலந்து தயாரிக்கப்படும் கோல்டு மட் பேக் ஆக இருந்தாலும் உடலில் பூசிய 20-30 நிமிடங்கள் கழித்து, கழுவி விட வேண்டும்.
யார் செய்யக் கூடாது?
மனநலம் பாதித்தவர், காயங்கள் இருப்பவர், காய்ச்சல் சமயம், கர்ப்பக் காலம், மழைக்காலம் ஆகிய தருணங்களில் மட் தெரப்பியை தவிர்க்கலாம்.
என்னென்ன நன்மைகள்?
மண்ணில் உள்ள தாதுக்கள், சத்துக்கள் உடலில் இறங்கும். உடலில் உள்ள சரும துவாரங்கள் திறக்கவும் உதவியாக இருக்கும்.
நோயாளிகளின் நாடி துடிப்பு குறைந்திருந்தாலும் கூட, மட் தெரப்பி சிகிச்சை சிறந்த பலனளிக்கும்.
வயிற்றில் உள்ள உஷ்ணத்தை குறைக்க, செரிமானத்தை மேம்படுத்த மட் தெரப்பி சிறந்தது.
கண்களின் மேல் சின்ன துணியை வைத்து, அதன் மேல் மட் பேக் போட்டால் டென்ஷன், மனஅழுத்தம்,
உயர் ரத்த அழுத்தம் ஆகியவை சரியாகும்.
மண்ணில் தாதுக்கள் நிறைந்திருக்கும். சூரிய ஒளியில் இருந்து சத்துக்களைப் பெற, மண்ணில் உள்ள
தாதுக்கள் உதவும். இவை அனைத்தும் சருமத்தைச் சுத்தம் செய்யும். கிளென்சிங் செய்த பலன்கள்
கிடைக்கும். சருமத்தின் மேல் படர்ந்த அழுக்கு, தூசு, கிருமிகள் நீங்கும்.
செரிமான கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் வரக் கூடிய பிரச்னைகள் ஆகியவை சரியாகும்.
சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும் இடத்தில், சருமம் பளபளப்பாக மாறும்.
சரும நோய்கள் எதுவும் நம்மை அண்டாது.
ஹாட் மட் தெரப்பி செய்வதால் உடல் வலிகள் குறையும். மூட்டுக்கள், தோள்ப்பட்டை, கை, கால், முதுகு ஆகிய இடங்களில் உள்ள வலிகள் குறையும்.
ரத்த நாளங்கள் சீராக வேலை செய்யும்.
சீரற்ற ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல்பருமன் ஆகிய பிரச்னைக்கு சிறந்த தீர்வாக அமையும்.