கோடையில் மாங்காய் விலை குறைவில் அதிகம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் மாங்காயை பலர் தொக்கு, ஊறுகாய் என்று செய்து சுவைப்பார்கள். ஆனால் அதனை கொண்டு அருமையான சுவையில் புலாவ் செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா?
அதிலும் இது மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும்படியும் இருக்கும். சரி, இப்போது அந்த மாங்காய் புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Exotic Green Mango Rice Pulao Recipe
தேவையான பொருட்கள்:
அரிசி – 1 1/2 கப் (குக்கரில் போட்டு சாதம் தயார் செய்து கொள்ளவும்)
பச்சை மாங்காய் – 1 (துருவியது)
வேர்க்கடலை – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, கடுகு, வரமிளகாய் சேர்த்து குறைவான தீயில் தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் துருவிய மாங்காயை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்கி, பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, 7 நிமிடம் பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர கொதிக்க விடவும்.
பிறகு அதில் சாதத்தை போட்டு, நன்கு சாதத்துடன் மசாலாக்கள் ஒன்று சேர பிரட்டி, பின் எலுமிச்சை சாற்றை அதன் மேல் பிழிந்து பிரட்டி, கொத்தமல்லியைத் தூவினால், மாங்காய் புலாவ் ரெடி!!!