இந்தியா பன்முக கலாசாரம் கொண்ட நாடு மட்டுமல்ல. உணவு பழக்க வழக்கங்களிலும் மாறுபாடுகளை கொண்டது. காஷ்மீரின் ‘கஹ்வா’ டீயை ரசிப்பதில் தொடங்கி தமிழ்நாட்டின் பில்டர் காபியை ருசிப்பது வரை பானங்களில் மட்டுமல்ல உணவு வழக்கத்திலும் ரசனை மாறுபடுகிறது. முன்னோர் காலத்தில் மூன்று வேளையும் உணவு சாப்பிடும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. பின்னர் சிற்றுண்டி, மதியம், டிபன் என உணவு வழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. சமீபத்திய ஆய்வு ஒன்று, இந்தியர்களில் 10 பேரில் 8 பேர் ஒரு வேளை உணவில் ‘ஸ்நாக்ஸ்’ இடம்பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறுகிறது. நொறுக்கு தீனிகள் மீதான நாட்டம் அதிகரித்து வருவதே அதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மாண்டெல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தி ஹாரிஸ் என்னும் கருத்துக்கணிப்பு நடத்தும் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. ஆய்வின் மூலம் தெரியவந்துள்ள சுவாரசியமான அம்சங்கள்:
இந்தியர்களில் 10-ல் 8 பேர் ஒரு வேளை உணவையாவது சிற்றுண்டியாக மாற்றுகிறார்கள். தின்பண்டங்கள் மீதான விருப்பம் அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அப்படி சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்து விஷயத்தில் பின் தங்கி விடுகிறார்கள்.
கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக 92 சதவீத இந்தியர்கள் தாங்கள் சாப்பிடும் உணவு பொருட்களில் உள்ளடங்கி இருக்கும் சத்துக்கள், உணவில் சேர்க்கப்படும் பொருட்கள், அதன் சுவை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அவை பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்களிடம் புதிய வகை சிற்றுண்டிகளை ருசித்து பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 77 சதவீத இந்தியர்கள் புதிய வகை சிற்றுண்டியை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள். சமூக ஊடகங்கள்தான் அதனை ருசிப்பதற்கான ஆர்வத்தை தூண்டியதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் சிற்றுண்டி பற்றிய எண்ணம் விரிவடைந்து இருப்பதாக 83 சதவீதம் பேர் கூறுகிறார்கள்.
நொறுக்கு தீனிகள் வகையை சார்ந்த சிற்றுண்டிகளை ருசிக்கும் விஷயத்தில் உடல் ஆரோக்கியத்தைவிட மனதுக்கு பிடித்திருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஏதாவது ஒரு தின்பண்டம் ரொம்ப பிடித்துபோய்விட்டால் அதனை அடிக்கடி சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றவும் செய்கிறார்கள்.
10-ல் 8 இந்தியர்கள் தங்களின் சமூகம் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிமுறையாக தின்பண்டங்களை ருசிப்பதாக கூறி உள்ளனர்.