ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் போது, வாயில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசும். இதனால் வேலை செய்யும் இடத்தில் மற்றவருடன் சரியாக பேச முடியாமல் அவஸ்தைப்படக்கூடும். இதற்கு முக்கிய காரணம் வாய் வறட்சியுடன் இருப்பது தான். அதுமட்டுமின்றி நோன்பு ஆரம்பிக்கும் முன் உட்கொள்ளும் உணவும் காரணமாகும்.
அதுவும் நோன்பு ஆரம்பிக்கும் முன் அல்லது முடித்த பின் கார்போஹைட்ரேட் உணவுகளை போதிய அளவில் உட்கொள்ளாமல் இருப்பது, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடாமல் இருப்பது போன்றவையும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இவற்றால் இரத்தத்தில் உள்ள கீட்டோன்கள் ஒன்றிணைந்து, வாய் துர்நாற்றத்தை வீசும்.
ஆனால் நோன்பு காலத்தில் ஒருசில உணவுப் பொருட்கள் மற்றும் பழக்கவழக்கங்களை மேற்கொண்டு வந்தால், வாய் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கலாம். இங்கு ரமலான் நோன்பு காலத்தில் வாய் துர்நாற்றம் வீசாமல் புத்துணர்ச்சியுடன் இருக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான சகர் (நோன்பு ஆரம்பிக்கும் முன் உண்ணும் உணவு)
காலையில் நோன்பு ஆரம்பிக்கும் முன் பழங்கள் மற்றும் காய்கறிகளை சகர் உணவாக எடுத்து வந்தால், நோன்பு காலத்தில் வாய் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கலாம். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்கள், பற்களை சுத்தப்படுத்தும்.
பேக்கிங் சோடா
நீர் சகர் உணவிற்கு பின், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு போன்றவற்றை நீரில் கலந்து வாயை கொப்பளிக்கவும். அதிலும் 1 கப் நீரில் 1/4 கப் பேக்கிங் சோடா, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு வாயைக் கொப்பளித்தால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
கிராம்பு தண்ணீர்
1 டம்ளர் நீரில் சிறிது கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, அந்த நீரை குளிர வைத்து, சகர் உணவிற்கு பின் வாயைக் கொப்பளித்தால், நோன்பு காலத்தில் வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
வெங்காயம் மற்றும் பூண்டு முடிந்த வரையில்
ரமலான் மாதத்தில் வெங்காயம் மற்றும் பூண்டை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை அருகில் வர முடியாத அளவில் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
சகர் உணவில் சீஸ் வேண்டாம்
சீஸ் கூட வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஒருவேளை சீஸ் சாப்பிட்டால், சிறு எலுமிச்சை துண்டை உப்பில் தொட்டு சப்புங்கள். இதனால் எலுமிச்சையானது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும்.
சகர் மற்றம் ஃப்தாரில் நீர் அதிகம் குடிக்கவும்
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் வாய் துர்நாற்றம் வீசும். எனவே சகர் மற்றும் ஃப்தார் நேரத்தில் 3 லிட்டர் தண்ணீரை தவறாமல் குடித்துவிடுங்கள். இதனால் பகல் நேரத்தில் வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.
மௌத் வாஷ் அல்லது மிஸ்வாக்
நோன்பு காலத்தில் வாய் மிகவும் துர்நாற்றம் வீசினால் மௌத் வாஷ் அல்லது மிஸ்வாக் என்னும் பற்களை சுத்தம் செய்ய உதவும் குச்சி கொண்டு பற்களை சுத்தம் செய்யலாம். ஆனால் அப்படி செய்யும் போது, எதையும் விழுங்கிவிடாதவாறு கவனமாக இருங்கள்.
பேஸ்ட் இல்லாமல் பிரஷ்
நோன்பு காலத்தில், பேஸ்ட் இல்லாமல் வெறும் பிரஷ் கொண்டு பற்களை துலக்கலாம். இதனால் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பற்காறைகள் வெளியேற்றப்பட்டு, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
நல்ல கார்போஹைட்ரேட் உணவுகள்
நோன்பு காலத்தில் உடலில் கீட்டோன்கள் ஒன்றிணையாமல் இருக்க, சகர் நேரத்தில் கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள். அதுவும் வாழைப்பழம், ஓட்ஸ் மற்றும் இதர தானியங்களால் செய்யப்பட்ட உணவை உட்கொண்டு வந்தால், பகல் நேரத்தில் வாய் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கலாம்.