ஆடு, மாடு, பன்றி இறைச்சிகளை வாங்கும்போது கொழுப்பு தவிர்த்து வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் விலங்குகளின் உடலில் சுரக்கும் ஹார்மோன் நச்சுகள், நுண்கிருமிகள் அனைத்தும் பெரும்பாலும் கொழுப்புத் திசுக்களில்தான் தஞ்சம் அடையும்.
விலா எலும்புகளை சுற்றிய தசைகள் மற்றும் பின்னங்கால் பெருந்தொடை இறைச்சியை தேர்வு செய்வது நல்லது. உடனடியாக வெட்டி விற்கப்படும் இறைச்சியை வாங்கி அடுத்த சில மணி நேரங்களுக்குள் சமைத்து சாப்பிடுவது நல்லது. இரவில் வாங்கிவிட்டு, காலையில் சமைப்பதோ, பிரிட்ஜ்ஜில் வைத்திருந்ததால் கெட்டுப்போயிருக்காது என்று நினைப்பதோ தவறு.
ஆரோக்கியமான கோழி இறைச்சி சாப்பிட விரும்புபவர்கள், வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழி, சேவல்களை வாங்கி சமைக்கலாம். பண்ணைகளில் வளர்க்கப்படும் கறிக்கோழிகள், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், நிறைய இறைச்சிக்காக கொழுத்த தீவனங்கள் கொடுத்து வளர்க்கப்பட்டதாக இருக்கும். போதுமான சூரியஒளி, இடவசதி, சத்துகள் கிடைக்காமல் வளரும் இவை அதிக நோய் எதிர்ப்பு சக்தியின்றி காணப்படும். மரபணு முறையிலும், ஊசி மருந்துகள் மூலமும்கூட கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இவை நடப்பதற்குக்கூட சக்தியற்றவையாக வளரும். அதை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். கோழி இறைச்சியில் தோல்பகுதியை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். மீன்களில் பண்ணை மீன்களைவிட கடல் மீன்களும், ஏரி மீன்களும் சிறந்தவை. வழக்கமாக உணவுப் பொருட்கள் வாங்கும் கடைக்காரர் மற்றும் இறைச்சி கடைக்காரரிடம் தனக்கு இதுபோன்ற உணவுகள்தான் வேண்டும் என்பதை கண்டிப்பாக கூறிவிடுங்கள். அவற்றை மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள். ஆரோக்கிய ஆயுள் பெறுங்கள்!