தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண் பார்வை தெளிவாகும் என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி, கேரட் உடலின் பல்வேறு பிரச்சனைகளையும் குணமாக்கும். அத்தகைய கேரட்டை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது பொரியல் போன்றோ செய்து சாப்பிடலாம்.
இங்கு மிகவும் ஈஸியான கேரட் பொரியல் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
Tasty Carrot Poriyal Recipe
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கேரட் – 3-4
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
சீரகம் – 1/2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதனை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாசிப்பருப்பை நீரில் ஊற வைத்து, நீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் கேரட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின் அதில் 1/2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
கேரட் நன்கு வெந்து, தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், கேரட் பொரியல் ரெடி!!!