குளிர் காலமாக இருந்தால் கூட சில்லென்ற உணவுகளோ, பானங்களோ குடிக்காமல் இந்த பல் கூச்சத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், இந்த கோடைக் காலம் வந்துவிட்டால் கொளுத்தும் வெயிலுக்கு சில்லென்ற உணவும், ஜூஸும் வேண்டி நாக்கு ஒரு பக்கம் ஓடினால், அய்யோ.. அம்மா.. பல்லு கூசும் என்று பற்கள் ஒரு பக்கம் ஓடும்.
அந்த பற்பசை (டூத் பேஸ்ட்), இந்த பற்பசை என்று எதைப் பயன்படுத்தியும், எந்த பலனும் இல்லையா? கவலையை விடுங்கள் அமைச்சரே!!! ஒரு சில விஷயங்களை சரியாக பின்பற்றி வந்தால் இந்த பல் கூச்சம் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுதலை அடைந்துவிடலாம். ஓகே! இனி விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்…
மென்மையான டூத் பிரஷ்
நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை மென்மையான பிரிஷல்ஸ் (bristles) உடைய டூத் பிரஷை பயன்படுத்த துவங்குங்கள். இது, உங்கள் பற்களின் மேல் படர்ந்திருக்கும் கம் போன்ற படிவத்தை சேதமைடையாமல் பாதுகாக்க உதவும்.
ஃப்ளோரைடு
நீங்கள் பயன்படுத்தும் பல் பொருட்கள் ஃப்ளோரைடு கலப்பு உள்ள பொருட்களாக தேர்ந்தெடுத்து வாங்குங்கள். ஃப்ளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மையில் சிறந்து விளங்குகிறது.
அமிலத்தன்மை உள்ள உணவுகள்…
அமிலத்தன்மை வாய்ந்த உணவுகள் அல்லது பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், இது உங்களது பற்களை பதம் பார்த்துவிடும். மற்றும் பற்களின் எனாமலில் பாதிப்பினை உண்டாக்கிவிடும்.
இனிப்பான உணவுகளை தவிர்த்துவிடுங்கள்
பல் கூச்சம் அதிகமாக இருப்பவர்கள் இனிப்பான உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது. இனிப்பு உணவுகள் உங்கள் பல் கூச்சத்தை வெகுவாக அதிகப்படுத்தும் தன்மைக் கொண்டது.
பல் மருத்துவர்
இரசாயனமும், சோடா கலப்பும் உள்ள பல தீய தன்மை வாய்ந்த பானங்களை பருகுவதனால் உங்களுக்கு பல பல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, சீரான இடைவேளையில் பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.
இயற்கை மருந்து
ஆலமரம் அல்லது வேப்பமரம் குச்சியை பயன்படுத்தி பல் துலக்குவது நல்ல பயன் தரும். இது, பாட்டி காலத்து வைத்தியம்.
நிறைய தண்ணீர்
சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதனால் கூட பல் கூச்சம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, தினமும் சரியான அளவு தண்ணீர் பருகுங்கள்.