ஓமம் மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். ஓமம் விதைகள் மருத்துவத்திலும், உணவிலும் பயன்படுகிறது. சீதளத்தால் ஏற்படும் ஜுரம், சளி, இருமல், வயிறு சம்மந்தமான நோய்கள், குடல் இரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள் போன்றவற்றை ஓமம் சரி செய்யும் என சித்த மருத்துவ நூல்களில் குறிபிடப்பட்டுள்ளது.
இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். ஓமம் செடி ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கிறது. இதன் இலைகள் சிறகு போன்ற பிளவுபட்ட நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீளமாக வளர்ந்திருக்கும். இதன் காய்கள் மிகுந்த வாசமுள்ளவை. முற்றிப் பழமாகிய பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகிறது.
ஓமத்தை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது. ஓமத்தில் ‘தைமோல்’ என்னும் வேதிபொருள் உள்ளது. இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது. இந்த வேதிப்பொருள் தைம் என்னும் மூலிகையிலும் உள்ளது. எனவே தான் தைம் மற்றும் ஓமம் இரண்டும் ஒரே மாதிரியான மணத்தைக் கொண்டுள்ளது.
வயிற்று கோளாறுகளை சரிசெய்யும்
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான உணவு முறையை பின்பற்றததால் வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்டுகின்றனர். இந்த மேற்ண்ட பிரச்சனை உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியவுடன் வடிகட்டி அருந்தினால் மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.
வயிறு உப்பசம், கடுப்பு நீங்கும்
ஓமம், மற்றும் மிளகு இரண்டையும் தலா 35 கிராம் எடுத்து, இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
தொண்டை கட்டு, இருமல் நீங்கும்
ஒரு சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் தொடர்ந்து வரும். அப்படியானவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் போன்றவற்றின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொண்டை கட்டு, தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.
பசியை ஏற்படுத்தும்
நல்ல தூக்கமும், நல்ல பசியும் இருந்தால்தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறான் என அர்த்தம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் உடலும், மனமும் பாதிக்கப்படும்.
அப்படியானவர்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் ஓமத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் பசியின்மை நீங்கி இயல்பாக பசி எடுக்கும். நன்றாக சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
ஆஸ்துமாவை விரட்டும்
தினமும் தவறாமல் ஓம தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் அண்டாது என்று கூறப்படுகிறது.
அஜீரணம் தீரும்
வயிற்றில் கோளாறு இருந்தாலோ, வயிற்றில் அடிக்கடி சத்தம் வந்தாலோ, ஓமத்தையும் சீரகத்தையும் வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, தினமும் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.