மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிட தரைதளத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அரசு மருத்துவமனை டீன் வனிதா கலந்து கொண்டார். அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் அர்ஷியாபேகம், மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ், அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் ஏகநாதன், டாக்டர்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மார்பக புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது. மேலும் மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடல் நடத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பிங்க் நிற பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் வனிதா நிருபர்களிடம் கூறியதாவது:-
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாதமாக இந்த மாதம் கருதப்படுகிறது. மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் அச்சம் இருக்கக்கூடாது என்ற குறிக்கோளுக்காக இளஞ்சிவப்பு நிற (பிங்க்) பலூன் பறக்கவிடப்பட்டது. மார்பக புற்றுநோயை ஆரம்பகாலத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணம் அடையலாம். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட உடல் பருமனும் முக்கிய காரணமாகும்.
மேலும், தாய்ப்பால் கொடுக்காமல் இருத்தல் போன்ற காரணங்களாலும் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. ஆகவே பெண்கள் தனக்கு தானே பரிசோதை செய்து கொள்ள வேண்டும். திருச்சி அரசு மருத்துவமனையில் இன்னும் ஓரிரு மாதத்தில் மேமோகிராம் என்ற எந்திரம் நிறுவப்பட உள்ளது. இதன்மூலம் புற்றுநோயை ஆரம்ப காலத்தில் துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும். இதுதவிர ரேடியோதெரபி எந்திரமும் வர இருக்கிறது. இந்த வசதிகள் வந்தால் சிறந்த சிகிச்சை அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு நிலவரப்படி, 13 லட்சத்து 9 ஆயிரமாக இருந்த மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 15 லட்சத்து 7 ஆயிரமாக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோய் 2016-ல் 9,200-லிருந்து தற்போது 12,300 ஆக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.
Courtesy: MalaiMalar