உணவின் சுவையை எப்படி உப்பு அதிகரிக்கிறதோ, அதேப்போல் சர்க்கரையும் சுவையை அதிகரிக்கக்கூடிய ஒன்று. ஆனால் சர்க்கரை மிகவும் ஆபத்தான சுவையூட்டி. இதன் சுவைக்கு பலர் அடிமையாக உள்ளனர். அப்படி அடிமையானவர்கள் டீ, காபி, பால் போன்றவற்றிற்கு சர்க்கரையை அள்ளிப் போட்டு குடிப்பார்கள். இப்படி சர்க்கரையை அள்ளிப் போட்டு சாப்பிடுவதால், ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியுமா?
இங்கு போர்டிஸ் மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணரும், எடை குறைப்பு ஆலோசகருமான சிம்ரன் சைனி, சர்க்கரையை உணவில் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கூறியது கொடுக்கப்பட்டுள்ளது.
அன்றாட சர்க்கரையின் அளவு
ஒரு நாளைக்கு பெண்கள் 6 டீஸ்பூனும், ஆண்கள் 9 டீஸ்பூனும் தான் எடுக்க வேண்டும்.
பானங்களைத் தவிர்க்கவும்
பலருக்கு தாம் அதிக அளவில் சர்க்கரையை எடுத்து வருகிறோம் என்றே தெரியவில்லை. எப்படியெனில் பெரும்பாலானோருக்கு குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி குடிக்கும் குளிர்பானங்களின் சின்ன கேனில் 7 டீஸ்பூன் சர்க்கரையும், பெரிய கேனில் 44 டீஸ்பூனுக்கும் அதிகமாக சர்க்கரை உள்ளது. ஆகவே இவற்றைக் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டிய இனிப்புகள்
சாக்லெட், பாஸ்ட்ரீஸ், மிட்டாய்கள், ஃபாஸ்ட் புட், செரில், ஐஸ் க்ரீம், டப்பாவில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், சூப், ஆல்கஹாலிக் பானங்கள் போன்றவற்றில் சர்க்கரையின் அளவு சொல்ல முடியாத அளவில் நிறைந்துள்ளது. மேலும் சர்க்கரையில் கலோரிகள் மட்டும் தான் உள்ளது, உடலுக்கு வேண்டிய வேறு எந்த ஒரு வைட்டமின்களோ, சத்துக்களோ இல்லை.
அதிக சர்க்கரையால் சந்திக்கும் பிரச்சனைகள்
அளவுக்கு அதிகமாக சர்க்கரையை சேர்ப்பதால், உடல் பருமன், பல் சொத்தை, நீரிழிவு போன்றவை ஏற்படுவதோடு, மெட்டபாலிசம் தொடர்புடைய நோய்களான உயர் கொலஸ்ட்ரால், இன்சுலின் சுரப்பில் பிரச்சனை மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் ஏற்படக்கூடும்.
சர்க்கரைக்கான மாற்றுப்பொருள்
இனிப்பு சாப்பிட விரும்புபவர்கள், சர்க்கரைக்கான மாற்றுப் பொருளான தேன், சுகர்-ப்ரீ போன்றவற்றை சேர்த்துக் கொண்டால், எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.