கண்டிப்பாக வார இறுதியில் சரக்கடிக்காமல் பொழுதை கழிப்பவர் எண்ணிக்கை, இரவு நட்சத்திரங்களின் நடுவே தோன்றும் நிலவைப் போல எங்கோ ஒருவர் தான் இருப்பார்கள். சரக்கடிப்பது தவறல்ல அதை தலை கால் புரியாத அளவு குடிப்பது தான் தவறு. இளைஞர் நலன் கருதி அரசு நடத்தும் ஒரே துறை டாஸ்மாக் துறை தான் என்று இன்றைய இளங்காளையினர் பறைசாற்றுகின்றனர். அரசும் தெருவிற்கு தெருக் கிளைகள் திறந்து வைத்து அவர்களை ஆதரவிக்கிறது. அதனால், நாம் இங்கு குடித்து மட்டையாக வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக சரக்கடித்து விட்டு சறுக்கிவிழாமல் இருக்க செய்ய வேண்டியவை என்னவென்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
சரக்கு விற்பது எப்படி அரசின் உடைமையோ, அதேப் போல அதை வாங்கி குடிப்பது குடிமக்கள் உரிமைப் பெற்ற நமது உரிமை. உரிமை உள்ளது என உரிமை மீறல் செய்தால் அரசு தண்டிக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அதனால் “டிரிங் அண்ட் டிரைவ்” செய்வதை தவிர்த்திடுங்கள். இது தமிழ் போல்ட் ஸ்கையின் அன்பு வேண்டுகோள்! சரி வாருங்கள் இனி சரக்கடித்து விட்டு சறுக்கிவிழாமல் இருக்க செய்ய வேண்டியவை என்ன என்ற தெரிந்துக்கொள்ளலாம்…
தண்ணீர்
முடிந்த வரை சரக்கடித்துவிட்டு தூங்குவதற்கு செல்லும் முன் நிறைய தண்ணீர் குடியுங்கள். இது தலைசுற்றல் மற்றும் மறுநாள் காலை ஏற்படும் நீர்ப்போக்கு போன்றவற்றை குறைக்க உதவும்.
பழங்கள்
காலை வரை தொடர்ந்து ஹேங் ஓவர் குறையாது இருந்தால் நிறைய பழங்கள் மற்றும் பழரசம் அருந்துங்கள் இது ஹேங் ஓவரை குறைக்க பெருமளவில் உதவும்.
ஓய்வு
ஹேங் ஓவர் குறையவில்லை என்றால் தயவு செய்து ஏதோ உலகையே நீங்கள் தான் காப்பற்றப் போவது போல எண்ணி அதிகாலை எல்லாம் எழுந்திருக்காது நன்கு ஓய்வெடுங்கள்.
வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்
சரக்கடிப்பது என்று முடிவாகிவிட்டால் இயன்ற வரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம். மற்றும் குடித்தப் பின் உணவு உட்கொள்ளாமல் படுக்கைக்கு செல்ல வேண்டாம்.
டீ, காபி
தலைக்கு மேல் குடித்துவிட்டு ஏதோ ஒரு மாதிரி இருக்கிறது என டீ, காபி குடிக்காதீர்கள் இது தலை சுற்றலை ஏற்படுத்திவிடும்.
“டிரிங் அண்ட் டிரைவ்”
தலை கால் புரியாத அளவு குடித்து விட்டு ஸ்டேரிங் எது, பிரேக் எது என தெரியாமல் வாகனம் ஓட்ட வேண்டாம். இது உடல் நலத்திற்கு மட்டும் அல்ல உயிர் நலத்திற்கும் கேடு விளைவிக்கும்.
தவிர்க்க வேண்டியது
இதற்கு எல்லாம் மேலாக, ஹேங் ஓவரை தவிர்க்க வேண்டும் எனில், நீங்கள் அதிகம் குடிப்பதை, அதாவது ஹேங் ஓவர் ஆகும் அளவிற்கு குடிப்பதை தவிர்த்துவிடுங்கள்.