கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே இத்தகைய கீரைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஆனால் சிலருக்கு கீரையை பொரியல் செய்தால் பிடிக்காது. அத்தகையவர்கள் கீரையை தோசை செய்து சாப்பிடலாம்.
இங்கு கீரைகளில் ஒன்றான பசலைக்கீரையைக் கொண்டு எப்படி தோசை செய்வது என்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!
Palak Dosa Recipe
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை – 1 கப்
கைக்குத்தல் அரிசி – 1/4 கப்
பசலைக்கீரை – 1 கப்
வரமிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலை மற்றும் அரிசியை தனித்தனியாக 5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கீரையை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்பு கிரைண்டரில் கொண்டைக்கடலை, கீரை, வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் அரிசியைக் கழுவிப் போட்டு மென்மையாக ஓரளவு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை தாளித்து மாவில் ஊற்றி கலந்து, 30 நிமிடம் ஊற வைக்கவும்.
இறுதியில் அந்த மாவை தோசைகளாக சுட்டு எடுத்தால், பசலைக்கீரை தோசை ரெடி!!!