ஒரு பெண் தன் வயிற்றில் குழந்தையை சுமக்கும் காலம் மிகவும் மகிழ்ச்சியான காலம். இது உண்மையா? நீங்கள் இதைப் பெரும்பாலும் உங்களைச் சுற்றியுள்ள அனைத்து பெண்களிடமும் கேட்டிருக்க மாட்டீர்கள். ஒரு குறிப்பிட்ட அளவு பெண்களாவது இதில் என்ன பெரிதாக இருக்கிறது என நினைப்பவர்களாக உள்ளனர். இவர்களால் கர்ப்பத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்பது மட்டுமல்ல, அது அவர்களுக்கு பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தக்கூடிய ஒன்றும் கூட. இதற்குக் காரணம் கர்ப்ப கால பயம் தான்.
கர்ப்ப கால பயம் எனப்படுவது கர்ப்பம் மற்றும் குழந்தைப் பிறப்புக் குறித்த பெண்களின் அச்ச உணர்வைக் குறிக்கிறது. இது ஆங்கிலத்தில் டொகொஃபோபியா என்றும் அழைக்கப்படுகிறது. அனைத்து பெண்களையும் போல கர்ப்பம் தரிக்க விரும்புபவர்கள் முதலில் இந்த கர்ப்பம் குறித்த அச்சத்திலிருந்து வெளியே வர வேண்டும். டொகொஃபோபியாவின் தொடக்க நிலையில் உள்ள பெண்கள் நிஜ வாழ்கையில் அவ்வளவாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால், இரண்டாம் கட்டத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே தாங்கள் அனுபவித்த வலிமிக்க பிரசவத்தை நினைத்து மிகவும் பயப்படுவார்கள்.
டொகொஃபோபியாவின் தீவிரம் பல பெண்களிடம் பல கட்டங்களில் காணப்படுகிறது. அது இளம்பருவத்தில் தொடங்கி காலம் செல்லச் செல்ல வளர்கிறது. குழந்தைப் பிறப்புக் குறித்த அச்சம் இது போன்றவர்களை சிசேரியன் அறுவை சிகிச்சையை நாடச் செய்கிறது. இது கவனிக்கப்படாவிட்டால், மன அழுத்தத்தையும், படபடப்பையும் பின்வரும் காலங்களில் ஏற்படுத்தும். இந்த அச்சத்தைப் போக்க உங்களுக்கு சில டிப்ஸ் இதோ!
ஆதரவாக இருங்கள்
உங்கள் வாழ்க்கைத் துணை குழந்தை பிறப்பு குறித்த அச்சம் கொண்டவராக இருந்தால், அவருக்கு நீங்கள் பக்க பலமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அவரை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு, ஒவ்வொருவரும் ஒருவித பயத்தைக் கொண்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவருடன் துணையாக நின்று மனம் விட்டுப்பேசி அவருடைய கவலைகளை அறிந்து கொள்ளுங்கள். கர்ப்பம் தரிப்பது முக்கியம் என்றால் கர்ப்ப காலத்தில் அவர் மகிழ்ச்சியாக கவலையின்றி இருக்க வேண்டியது அதை விட முக்கியம்.
புரிதல்
உங்கள் துணையுடன் வெளிப்படையான அணுகு முறையைக் கையாளுங்கள். அவருடன் பேசி கர்ப்பத்தின் எந்த தருணம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறியுங்கள். சில பெண்கள் தங்கள் வயிற்றில் மர்மமான ஒரு உயிர் வளர்வதாக பயப்படுவார்கள். இன்னும் சிலர் குழந்தைகளை மிகவும் நேசித்தாலும் பிரசவ வலியைக் குறித்து அச்சம் கொள்வார்கள். அவர்களின் இந்த கவலைகளை நீங்கள் புரிந்து கொள்வது அவர்களை இந்த அச்சத்திலிருந்து வெளிக்கொணரும் ஒரு சரியான வழியை நீங்கள் கண்டுபிடிக்க உதவும்.
தெரிந்து கொள்ளுங்கள்
உங்களின் கற்பனை உலகில் வாழ்வதை விட்டுவிட்டு, குழந்தைப் பிறப்பை பற்றிய உளவியல் அணுகுமுறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். கூடி விவாதிப்பது மற்றும் பேசுவது ஆகியவற்றைத் தவிருங்கள். இதுப்போன்ற விவாதங்களில் மக்கள் எந்தவித மருத்துவ அறிவு அல்லது அறிவியல் சான்று இல்லாமல் விஷயங்கள் முன் வைக்கப்படுகின்றன. இதுப்போன்ற பழைய கட்டுக்கதைகளை அறவே தவிருங்கள். குழந்தைப் பேற்றைப் பற்றிய மருத்துவப் புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
நேர்மறையாக சிந்தியுங்கள்
குழந்தை வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பம் மற்றும் பிரசவம் ஆகிய வேதனைகளை கடந்தே தீர வேண்டும். பல லட்சக்கணக்கான பெண்கள் பாதுகாப்பாக குழந்தைப் பெற்றெடுப்பதை புரிந்து கொள்ளுங்கள், உங்கள் தாய் உட்பட. ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். அதாவது இந்த பிரசவ வலி என்பது ஒரே ஒரு நாள் மட்டுமே. அதை நினைத்து எந்நேரமும் நீங்கள் கவலை கொள்வதை தவிருங்கள்.
நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை
உங்கள் மனதை நேர்மறையான சிந்தனைகளில் செலுத்த அவசியமான ஒன்று நீங்கள் பிரசவத்தின் போது எந்த ஆபத்தும் இன்றி பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புவது தான். ஆனால் இது ஒரு மனம் மற்றும் உணர்வு சார்ந்த ஒன்றாக இருப்பதால், இதைக் கையாள்வது அவ்வளவு எளிதல்ல. உங்களுக்கு சிறந்ததான வழிமுறையை தேர்ந்தெடுக்க நீங்கள் பொறுமையோடும் பல்வேறு வழிமுறைகளை முயன்று கொண்டும் இருப்பது அவசியம்.
மருத்துவ ஆலோசனை
சில வேளைகளில் நீங்கள் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனைகள் பெற வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். இதுப்போன்ற சூழ்நிலைகள் உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வரும். அதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டாம். ஒரு தேர்ந்த மருத்துவ ஆலோசனை பெண்களிடையே நிலவும் குழந்தைப் பேற்றினைப் பற்றிய அச்சத்தை போக்க உதவலாம்.
மேற்கண்ட ஆலோசனைக்களைப் பின்பற்றி, கர்ப்பம் மற்றும் பிரசவத்தினைப் பற்றிய பயத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருங்கள்.