மட்டன் பிரியர்களுக்கு ஒரு அருமையான மற்றும் வித்தியாசமான ஒரு ரெசிபியைக் கொடுத்துள்ளோம். அது என்னவென்றால், கொத்துக்கறியை, முட்டைக்கோஸ் உடன் சேர்த்து ஒரு வித்தியாசமான சைடு டிஷ் ரெசிபியைத் தான் கொடுத்துள்ளோம். இந்த ரெசிபி மிகவும் சிம்பிளாக இருந்தாலும், சுவையாக இருக்கும்.
பேச்சுலர்கள் கூட இந்த கொத்துக்கறை கோசு ரெசிபியை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த கொத்துக்கறி கோசு ரெசிபிரைய எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொத்துக்கறி – 100 கிராம்
முட்டைக்கோஸ் – 300 கிராம் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 கப் (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொத்துக்கறியை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள கொத்துக்கறி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் மிளகாய் தூள், வேக வைத்துள்ள கொத்துக்கறி மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 15-20 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான கொத்துக்கறி கோசு ரெசிபி ரெடி!!! இதனை ரசம் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.