இந்த கால கட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது. குழந்தைகளின் நன்னடத்தையில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால் குழந்தையின் நல்ல பழக்கவழக்கங்கள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன. உங்கள் குழந்தைகளுக்கு எல்லாத் திறமைகளும் இருக்கின்றன. அதை சரியான வழியில் எடுத்துச் செல்வதே ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
சமூகத்தில் எப்படி பணிவுடன் நடப்பது, மற்றவர்களுடன் எப்படி பேசுவது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் போன்ற விஷயங்களை குழந்தைக்கு கற்றுத் தர வேண்டும். இதுவும் குழந்தைகளின் வளர்ச்சியில் மிகப் பெரிய முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர்கள் குழந்தைகள் என்பதால் எதையும் கடுமையாக சொல்ல வேண்டாம். அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். அரவணைத்து சொல்லுங்கள்.
இதற்காகத்தான் நாங்கள் சில டிப்ஸ்களை உங்களுக்கு வழங்க உள்ளோம். இந்த டிப்ஸ்கள் உங்கள் குழந்தைக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க உதவியாக இருக்கும், வாங்க பார்க்கலாம்…
அடிப்படையில் இருந்து தொடங்குங்கள்
ஆரம்பத்தில் இருந்தே உங்கள் குழந்தைக்கு “நன்றி”, தயவு செய்து, மன்னியுங்கள் போன்ற நல்ல வார்த்தைகளை சொல்லிக் கொடுங்கள். இந்த மாதிரியான கண்ணியமான வார்த்தைகளை கற்றுக் கொடுப்பது சமூகத்தில் மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதை காட்டும். மற்றவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள நேரிடும். குழந்தைகளால் ஒரே நேரத்தில் எல்லா வார்த்தைகளையும் கற்றுக் கொள்ள நேரிடாமல் போகலாம். குறைந்தது இரண்டு இரண்டு வார்த்தைகளாக சொல்லிக் கொடுங்கள். திரும்பத் திரும்ப இந்த வார்த்தைகளை சொல்லிக் கொடுக்கும் போது, அவர்கள் மனதில் பதிந்து விடும், விரைவில் கற்றுக் கொள்ளவும் செய்வார்கள்.
டேபிள் பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்
எப்பொழுதும் சாப்பிடும் போது ஸ்பூன் ஸ்போர்க் கொண்டு தான் சாப்பிட வேண்டும் என்று குழந்தைகளை வற்புறுத்த வேண்டாம். எப்பவும் அவர்களால் அதை செய்ய இயலாது. சாப்பிடும் போது குழந்தையை ஒரு இடத்தில் உட்கார வைப்பதே பெரிய சாதனை. 5 நிமிடத்திற்கு மேலாக அவர்கள் ஒரே இடத்தில் இருக்க மாட்டார்கள். எனவே சிறு வயதிலிருந்தே உணவு சாப்பிடும் போது டேபிள் பழக்கவழக்கங்களை கற்பியுங்கள். அமைதியாக சமத்தாக உட்கார்ந்து சாப்பிட்டால் அவர்களை பாராட்டுங்கள். பரிசு கொடுங்கள், உற்சாகப்படுத்துங்கள்.
சரியான முறையில் பேசும் பழக்கம்
சில சமயங்களில் குழந்தைகள் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பேசுவார்கள். கொஞ்சம் கவனமாக கவனியுங்கள். குழந்தைகள் நாம் பேசும் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனிக்க கூடியவர்கள். எனவே அவர்கள் இருக்கும் போது நன்றாக பேசுவது மிகவும் முக்கியம். ஏனெனில் அவர்கள் இன்னமும் கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எது சரி, எது தவறு என்று வேறுபடுத்தி பார்க்கத் தெரியாது. எனவே நீங்கள் தான் எப்படி பேச வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். முடிந்தால் குழந்தைகளிடமே நற்பேச்சாக பேசி வாருங்கள். இது அவர்கள் பேசும் பழக்கத்தை எளிதாக கற்றுக் கொள்ள உதவும்.
நல்ல நடத்தைக்கு உதாரணமாக இருங்கள்
எதையும் குழந்தைகளுக்கு உதாரணத்துடன் சொல்லும் போது அதை எளிதாக புரிந்து கொள்வார்கள். எனவே உங்கள் குழந்தைக்கு நல்ல நடத்தையை கற்றுக் கொடுக்க முதலில் நீங்கள் நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். உங்களைத் தான் அவர்கள் உதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். பெற்றோர்கள் நல்ல நடத்தையுடன் செயல்பட்டால் குழந்தையும் நல்ல நடத்தை உடையவர்களாக வளருவார்கள்.
உங்கள் சிறியவரை புகழ்ந்து பேசுங்கள்
ஒவ்வொரு குழந்தையும் சிறுசிறு பாராட்டுக்களை விரும்புகிறார்கள். குறிப்பாக அவர்கள் மதிக்கும் அன்பான உங்களிடம் இருந்து அது கிடைக்கும் போது மிகுந்த சந்தோஷத்திற்கு உள்ளாகி விடுகிறார்கள். குழந்தைகளின் வெற்றியை, நல்ல நடத்தையை, நேர்மறையான அணுகுமுறையை ஒருபோதும் புறக்கணித்து விடாதீர்கள். அவர்களை பாராட்டுங்கள். தட்டிக் கொடுங்கள். குழந்தைகள் எப்படி இருந்தாலும் உங்கள் கவனத்தை ஈர்த்து விடுவார்கள். எனவே அவர்கள் செய்யும் நற்செயலுக்கு வாயார பாராட்டுங்கள்.
பொறுமையாய் கற்றுக் கொடுங்கள்
பெரும்பாலான குழந்தைகள் சுயநலவாதியாக வளருகிறார்கள். ஒரு பெற்றோராக இதை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம். மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். அவர்கள் வளரும் போது, அவர்கள் இதை உணர்ந்து கற்றுக் கொள்வார்கள். மற்றவர்களிடம் தாழ்மையுடன் இருப்பார்கள். இதை நீங்கள் பொறுமையுடன் கற்றுக் கொடுத்தால் உங்கள் குழந்தையிடம் இது பிரதிபலிக்கும்.
நீங்கள் ஒரு குழந்தையை வளர்க்கும் போது பொறுமை மிகவும் அவசியம். குழந்தை வளர்ப்பு எளிதாக இருக்காது. ஆனால் பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தையின் ரோல்மாடல் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். எனவே நீங்கள் உதாரணமாகத் திகழ்ந்து எதையும் கற்றுக் கொடுங்கள்.